ஈஷா யோகா மையத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து நேற்று தீர்ப்பளித்த நிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் , ஈஷா யோகா மையத்துக்கு யோகா கற்க சென்ற தனது இரு மகள்களையும் ஆசிரமத்தினர் மூளைச் சலவை செய்து, துறவறம் ஏற்கச் செய்துள்ளதாகவும், தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை, சமூக நலத்துறைகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஈஷா யோகா மையம் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருக்கின்றனர் என குறிப்பிட்டு ஆட்கொணர்வு மனு வழக்கை முடித்து வைப்பதாக தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்’ என சத்குரு வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது” என சத்குரு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 : உதயநிதி உறுதி!