விண்ணை முட்டும் சரணகோஷம்: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

தமிழகம்

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை நடைபெறும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காகக் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

அதன்பின் கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதன்பின் இன்று அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் மாலை போடத் தொடங்கியுள்ளனர்.

sabarimalai Ayyappan devotees who started the fast

கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று (நவம்பர் 17) தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீராடி ஏராளமான பக்தர்கள் குற்றால நாதர் கோயிலில் மாலை போட்டுக்கொண்டனர்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். கோடம்பாக்கம் ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் இன்று காலையில் அலை மோதியது.

சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை போட்டுக்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம், வளவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பகவான் சரணம், பகவதி சரணம் என்ற ஐயப்பனின் பாடலை பாடிக்கொண்டே குழந்தைகள், ஆண்கள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ராமநாதபுரம் அடுத்துள்ள ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதுபோன்று தமிழகமெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் காலை முதலே பனியையும் பொருட்படுத்தாமல் கோயில்களுக்கு சென்று மாலை போட்ட வண்ணம் இருக்கின்றனர்.

41 நாள் நடைபெறும் இந்த மண்டல பூஜையை முன்னிட்டு, இன்று 50,000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்யலாம் என்று தேவசம் போர்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் சீசன் முழுவதும் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகக் கூறும் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன், அடுத்த 10 தினங்களில் 7 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் வழியாக மட்டும் நாளொன்றுக்கு சாமி தரிசனம் செய்ய 40000 பேர் புக் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

“நாள் ஒன்றுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பக்தர்கள் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்” என்று கேரள தேவசம்போடு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வர இன்று (நவம்பர் 17) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், 94450-14452, 94450-17793 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு சிறப்புப் பேருந்து குறித்த விவகாரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரியா

கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!

அடுத்த ரவுண்டு : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *