சபரிமலை: நடப்பாண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு ரூ.357 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் படி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, இந்தக் காலகட்டத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். பக்தர்களின் காணிக்கை மற்றும் அரவணை பாயசம் ஆகியவற்றின் விற்பனை மூலமாக தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு சீசன் முடிந்த நிலையில், நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்துக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த், ‘‘இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71,909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16,884 கிடைத்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.10.35 கோடி அதிகம். இந்த சீசனில் 50 லட்சத்து 6.412 பேர் தரிசனம் செய்துள்ளனர்’’ என்றார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமர் குடமுழுக்கு நேரடி ஒளிபரப்பு: உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு!
தமிழக இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு!