கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 சந்திப்புகளின் ஓர் அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் இன்றும் நாளையும் (ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்) நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.
S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொகுத்து அதுகுறித்து கலந்துரையாட உள்ளனர்.
ஈஷாவில் S20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக பேசியுள்ள சத்குரு,
“G20 கூட்டங்கள் ஆன்மிக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
G20 பிரதிநிதிகளின் இரண்டு நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.
மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர்.
மேலும் சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் நேற்று முதலே ஈஷாவுக்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ராஜ்
24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!