புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகச் சமீபத்தில் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோ பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வரை சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த செய்தி அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மாநில அரசும் காவல்துறையும் வடமாநில தொழிலாளர்களின் மனதில் எழுந்த அச்சத்தைப் போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் முதலமைச்சருடன் தொலைபேசி வாயிலாகப் பேசி வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்திருந்தார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் பீகார் டிஜிபியுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தார். இரு மாநில அரசும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரப்பப்பட்ட வீடியோ போலியானவை மற்றும் பழைய வீடியோ என்று அறிவித்திருந்தது.
இருந்தாலும் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக உதவி எண்களையும் அறிவித்திருந்தது தமிழ்நாடு காவல்துறை. மேலும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது.
வதந்தி பரப்புபவர்களை கைது செய்வதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவரைக் கைது செய்யத் தமிழ்நாடு தனிப்படை டெல்லி சென்றது.
ஆனால் பிரசாந்த் உமாராவ் முன் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்கு செல்லுமாறு உத்தரவிட்டதோடு, மார்ச் 20 வரை பிரசாந்த் உமாராவை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து வதந்தி பரப்பியவர்களை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகப் போலி வீடியோ பரப்பியதாகத் தமிழக சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமீபகாலமாக சமூகவலைத்தளத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் சமூகவலைத்தளங்களை கண்காணித்து வந்ததில் முகநூலில் பிரஷாந்தகுமார் என்பவர், உண்மைக்குப் புறம்பான பொய் செய்திகளை வீடியோவாக தயார் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து வதந்தி பரப்பி வந்தது தெரியவந்தது.
எனவே பிரஷாந்த்குமார் மீது திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார், 153ஏ, 505(2) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்படி கடந்த மார்ச் 8ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பிரஷாந்த்குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம், லேட்டஹர் மாவட்டம் ஹொகிகாரா எனும் கிராமத்தில் பிரஷாந்த்குமாரை கைது செய்தது.
உரிய விசாரணைக்குப்பிறகு, லேட்டஹக் மாவட்ட உட்கோட்ட நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உத்தரவின் பேரில் திருப்பூர் அழைத்து வரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
மதுரை சம்பவம்- எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?
விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு!
