புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாகப் பீகாரில் ஒருவரை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கடந்த ஜனவரி மாதம் வீடியோ பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வந்து சென்ற பிறகு தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வரை சென்ற இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நிதிஷ்குமாரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும், பீகார் டிஜிபி உடன் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார். இதனையடுத்து இரு மாநில காவல்துறையும் போலி வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
போலியான வீடியோக்கள் பரப்பியவர்களை கைது செய்யத் தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். இந்நிலையில் போலியான வீடியோ பரப்பிய பிரசாந்த் உமாராவ் என்பவரின் ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவரை மார்ச் 20 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாகப் பீகார் மாநில ஹெஹெர்கா ரயில்வே நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிந்து வரும் பிரசாந்த் குமார் என்பவரை தமிழ்நாடு காவல்துறை இன்று (மார்ச் 11) கைது செய்துள்ளது.
பீகாரில் கைது செய்யப்பட்ட அவரிடம் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
மோனிஷா
கே.ஜி.எஃப் வில்லனை வரவேற்ற விஜய்
முதன்முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளம் பெற்ற பிரியங்கா சோப்ரா!