ஏப்ரல் 16 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில் பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஏப்ரல் 14) உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில், 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்தது. அப்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை அரசு தடுக்கக் கூடாது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பிரச்சினைகள் உள்ள இடங்களில் மட்டும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழக அரசின் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. ஆர். எஸ். எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல் துறையிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கேட்ட நிலையில் அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்தது.
ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல காவல்துறை உயர் அதிகாரிகள் பேரணி நடைபெறும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஏப்ரல் 14) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் பேரணி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், வேறு பாதையிலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பேரணியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோசடி புகாரை திசைதிருப்பும் அண்ணாமலை: திமுக தலைவர்கள் குற்றச்சாட்டு
பஞ்சாப் துப்பாக்கிச்சூடு… ராணுவ மரியாதை: உறவினர்கள் போராட்டம்!