சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ். அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் பணியாற்றி வரும் இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இவரது வங்கி கணக்கிற்கு நேற்று (அக்டோபர் 6) ரு.753 கோடி வரவு வந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வங்கியின் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை.
மேலும் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, “எனது வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்திருப்பதை இன்று காலையில் தான் பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பணம் வந்த சிறிது நேரத்திலேயே என்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு விட்டது.
இதனால் நான் வங்கி கிளையை தொடர்பு கொண்டேன். ஆனால் இணைப்பு கிடைக்க வில்லை. இதனால் நேரில் சென்று புகாரளிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் என்பவர் தன்னுடைய கோட்டக் மகேந்திரா வங்கி கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.1000 அனுப்பிய பிறகு அவரது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து வங்கி கிளையில் புகார் அளித்த பின் பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்துப் பார்த்த போது அவரது சேமிப்பு தொகை மட்டுமே இருந்துள்ளது. அதில், ரூ.756 கோடிக்கான வரவு செலவு விவரங்கள் இடம்பெறவில்லை.
இதே போன்று, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ் குமார் என்பவரது தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…