போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட தமிழக ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்திற்கும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் அண்மையில் பல்வேறு போக்குவரத்து விதிகள் வகுக்கப்பட்டு அதற்கான அபராதங்களும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி போக்குவரத்து காவல்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுவோரிடம் அபராதங்களை வசூலித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விதிகளை உயர் அந்தஸ்தில் இருப்பவர்களும், காவல்துறையினரும் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது.
இந்தநிலையில் கடந்த 14 ஆம் தேதி திருவான்மியூரில் மூன்று ஸ்டார்கள் கொண்ட ஏடிஜிபி அந்தஸ்துடைய அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வாகனம் ஒன்று ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் பயணித்திருக்கிறது.
இதைப்பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து விதியை மீறிய ஏடிஜிபி வாகனத்துக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், வாகனத்தை ஓட்டிய காவலருக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகார் அளித்தவருக்கு பதில் அளிக்கும் வகையில் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்ததை சென்னை காவல்துறை சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளது.
கலை.ரா