பாசி டிரேடிங் முறைகேடு- ரூ. 171 கோடி அபராதம் 27 ஆண்டுகள் சிறை –  டான்பிட் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Kalai

பாசி டிரேடிங் நிதி நிறுவன மோசடி வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 171 கோடி அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பாசி டிரேடிங் மோசடி

நிதி நிறுவன மோசடி வரலாற்றில் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய வழக்கு பாசி நிறுவனத்தின் ரூ. 930 கோடி மோசடி வழக்கு.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு 2011ம் ஆண்டில் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்திருக்கின்றனர்.

ஆனால் நிதி நிறுவனத்தார் முதலீடு செய்தவர்களுக்கு முறையான பணம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர்.

ரூ. 930 கோடி மோசடி

இதுகுறித்து நிதி நிறுவனத்தினர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு  விசாரணையை சி.பி.ஐ கையில் எடுத்திருந்தது.

12 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் டான்பிட் கோர்ட்டிலேயே 1402 பேர் சாட்சியளித்துள்ளனர்.  58571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மோகன்ராஜ், அவருடைய தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களில் கதிரவன் இறந்து விட்டார்.

டான்பிட்டில் வழக்கு

இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது.

இத்துடன் 2013ம் ஆண்டு இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து 9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்தது. அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு கூறுவதாக கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ரூ 171 கோடி அபராதம்

இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று(ஆகஸ்ட் 26) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

முறையாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் சிபிஐக்கு கண்டனமும் தெரிவித்தார்.

கலை.ரா

லட்சக்கணக்கில் லாபம் – பேராசை காட்டி மோசடி : இருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel