அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது இந்திய கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 19) இந்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய தனியார் நிறுவனங்கள்!
கடந்த 2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஜி.எஸ்.டி லிமிடெட் மற்றும் மேட்ரிக்ஸ் இன்க் என்ற இரு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டன.
இதற்காக இரு நிறுவனங்களிடமும் மொத்தம் ரூ.11.41 கோடி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இரு நிறுவனங்களும் முடித்த பணிகளை ஆய்வு செய்த போது, பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு துணைவேந்தரிடம் அளிக்கப்பட்ட பரிந்துரையில் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது தெளிவானது.
செய்யாத பணிக்கு ஊதியம்!
அதன்படி பல்கலைக்கழகத்திலேயே இல்லாத கல்விப் பதிவேடுகளின் நகல்களை ஸ்கேன் செய்ததாக ஒப்பந்தக்காரர் கணக்கு காட்டியுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் பணியில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் மாணவர்களின் தரவுகளில் இருந்து 7.33 லட்சம் பதிவுகளை மட்டுமே டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.

ஆனால் 20.92 லட்சம் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக கருதி ஜி.எஸ்.டி லிமிடெட் நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், எந்த பதிவையும் டிஜிட்டல் மயமாக்காத மேட்ரிக்ஸ் இன்க் என்ற நிறுவனத்துக்கு 1.2 லட்சம் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியதாக கருதி பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒப்பந்ததாரர் செய்த வேலைகளை சிறிதும் சரிபார்க்காமல், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் ரூ.11.41 கோடி பணம் வழங்கப்பட்டது சிஏஜி தாக்கல் செய்த அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.
ஒப்பந்தம் கோரலிலும் மோசடி!
மேலும் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் பட்டியலில் இருந்து விலைப்புள்ளிகளை கோரியதன் மூலம் டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒப்பந்தங்கள் பெற்ற நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து மோசடி செய்ததற்கான ஆவணங்களும் தணிக்கைத் துறையில் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்தவர் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிஏஜி குற்றஞ்சாட்டியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: அமலாக்கத் துறை!