தமிழகத்தில் மட்டும் பிரியாணிக்கு 10 ஆயிரம் கோடிக்கு சந்தை மதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உணவு வணிகத்தை ஆய்வு செய்யும் அமைப்பு ,பிரியாணியின் உறுதியான சந்தை ரூ. 2,500 கோடி என்றும், அமைப்புசாரா சந்தை மதிப்பு 7,500 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்றும் கூறுகிறது. பிரியாணிக்கான மிகப்பெரிய சந்தையாக சென்னை உள்ளது. இங்கு மட்டும் 50 சதவிகித சந்தை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜுனியர் குப்பண்ணா, புஹாரி, அஞ்சப்பர், சேலம் ஆர்.ஆர். பிரியாணி, பொன்னுசாமி, எஸ்.எஸ். ஹைதரபாத் பிரியாணி ஆகியவை முன்னணி பிரியாணி ஹோட்டல்களாக கருதப்படுகிறது. இது தவிர, இரவு , பகல் , காலை ,மாலை என 24 மணி நேரமும் பிரியாணி கிடைக்கும் வகையில் கடைகள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கின்றன. இதில், ஜுனியர் குப்பண்ணா ஹோட்டல் மட்டும் ஆண்டுக்கு 12 லட்சம் பிரியாணிகளை விற்பனை செய்கிறது.
தலப்பாக்கட்டி பிரியாணிக்கு மட்டும் தமிழகத்தில் 65 கிளைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ பிரியாணியை இந்த நிறுவனம் விற்கிறது.திருவிழா மற்றும் வார இறுதி நாட்களில் பிரியாணி விற்பனை தலப்பாக்கட்டியில் இரு மடங்காக உயர்கிறது.
தமிழகத்தில் கொங்கு பகுதியைதான் பிரியாணிக்கு முதன்மையாக பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் பிரியாணி இந்த பகுதியை சேர்ந்தது. தமிழகத்தில் பல முறைகளில் பிரியாணிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி, பாஸ்மதி அரிசி கொண்டு தயாரிக்கப்படும் முஸ்லிம் பிரியாணி, சீரக சம்பா அரிசி கொண்டு தயாரிக்கப்படும் கொங்கு பிரியாணி, செட்டிநாடு பிரியாணி,வாலஜா பிரியாணி, என பல ரகங்கள் உள்ளன.
சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள பிலால் பிரியாணி ஹோட்டல் நிர்வாக இயக்குநர் அப்துல் ரஹீம் கூறுகையில், ‘நாங்கள் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். காலையில் பிரியாணி தயாரித்து நாள்முழுவதும் விற்பதில்லை. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பிரியாணி தயாரிக்கிறோம். அப்படி நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கிலோ பிரியாணியை விற்கிறோம் ‘ என்கிறார்.
தமிழகத்தை பொறுத்த வரை சாலையோரங்களில் சிக்கன் பிரியாணி அரை பிளேட் 100 கால் பிளேட் 60வுக்கு கிடைக்கிறது. மட்டன் பிரியாணி 200 ரூபாய்க்கு வாங்க முடியும். சிறந்த ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி 250 முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னணி ஹோட்டல்களில் 600 ரூபாய்க்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒரு பிளேட் 1,600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அப்படியென்றால், எத்தனை கோடி பணம் பிரியாணி வர்த்தகத்தில் புழங்குகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தாஜ் கோரமண்டலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கில்லி பிரியாணி சென்னை பிரியாணி பிரியர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. ஸ்விக்கியில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் 46.1 லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரியாணிக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சந்தையால் அது தயாரிக்க பயன்படும் ஸ்டார்ட்அப் மசலா நிறுவனங்களின் சந்தை மதிப்பும் கூடியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்… ஸ்டாலின் அறிவிப்பு!
ஆன்ட்ராய்டில் புக் செய்தால் ஒரு கட்டணம்: ஐபோனில் புக் செய்தால் விலை அதிகம்… வாடகை கார் தில்லாலங்கடி?