நல்லவேளை அபராதம் போடாம விட்டாங்க… கோர்ட்டில் குட்டுப்பட்ட பாஜக

Published On:

| By Kavi

பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கமும் வழங்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 13ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை அறிவித்தது.

இதற்காக கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் வீடு தோறும் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, 2.21 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், ரொக்கம் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பரிசுத்தொகுப்போடு ரூ.1000 அல்லது ரூ.2000 ரொக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் திமுக கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின.

எனினும் நிதிச் சுமை காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் ரொக்கம் வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 10) மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் ஆஜராகி, ‘இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

“பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு நாட்களில் வர இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து தகுந்த நிவாரணம் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார்.

ஏற்கனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும் வழக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி ஸ்ரீராம், “இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று ஏற்கனவே நாங்கள் நிராகரித்த பிறகு மீண்டும் நீங்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

இதுபோன்று தொடர்ந்து முறையிட்டால் மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இந்த பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று காட்டமாக தெரிவித்தார். மனுதாரரின் கோரிக்கையும் நிராகரித்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னையில் கடல் பாலம் : அமைச்சர் வேலு சொன்ன தகவல்!

எகிறும் தங்கம், வெள்ளி விலை… நகை பிரியர்கள் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel