incentive for milk producers

பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை!

தமிழகம்

தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்க ஆவின் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (அக்டோபர் 04) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் அடிப்படையில் கொள்முதல் விலை அதிகபட்சமாக கொழுப்பு 5.9 சதவீதம் மற்றும் இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு ரூ.40.95 வரை வழங்கப்பட்டு வந்தது.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றும் சில உறுப்பினர்களின் பால் மாதிரிகளை சோதனை செய்த போது அதில் 6 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புச்சத்து இருந்தது தெரியவந்தது.

அதிக கொழுப்புச்சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து தற்போது உச்சபட்சமாக வழங்கப்பட்டு வந்த விலையை தரத்திற்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2. 7.5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7.5 வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அதிக கொழுப்புச்சத்துள்ள பாலுக்கு உரிய விலை கொடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கூட்டுறவு பால்

உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்சமான தொகை கிடைக்கும்.

தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிகர லாபத்தில் ஈவுத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்படள்ளது.

பாலின் தரத்திற்கேற்ப பால் விலையை வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உடனடி ஒப்புகைச் சீட்டு (Spot Acknowledgement) வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் தரமான பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை அதிகபட்சமாக கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு பால்பணம் காலதாமதமின்றி பட்டுவாடா செய்வது, கால்நடைகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடன் வசதி வழங்குவது போன்றவை சிறந்த முறையில் செயல்பட தொடங்கியுள்ளது.

மேலும் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம், கால்நடைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் செய்தல் போன்ற சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பால் உற்பத்தி வரும் நாட்களில் கணிசமாக பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஜி.ஆர். சிவாஜியை நட்சத்திரமாக மாற்றியவர் கலைஞர்: ரஜினி

பாஜக யாத்திரை ஒத்திவைப்பு : அண்ணாமலைக்கு என்னாச்சு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *