அடுத்தடுத்து எஸ்.ஐ களை துப்பாக்கியால் மிரட்டிய வாலிபர் : அச்சத்தில் காவல்துறை!

தமிழகம்

அதிகாலையில் தொலைபேசி புகாரை விசாரிக்க சென்ற எஸ்.ஐயை, துப்பாக்கியால் மிரட்டி தலையில் தாக்கிவிட்டு தப்பிய நபரை பிடிக்க, அடுத்த ஊருக்கு இரண்டு எஸ்.ஐ, கள் சென்றபோதும் துப்பாக்கியை காட்டி சுட்டுடுவேன் என மிரட்டி தப்பியுள்ள சம்பவம் காவல்துறையை அதிர வைத்துள்ளது.

நெய்வேலி தர்மல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தொப்பலிகுப்பம் கிராமத்திலிருந்து கமலம் என்ற மூதாட்டி ஒருவர், ஜனவரி 25 ஆம் தேதி காலையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரனைத் தொடர்புகொண்டு தங்களது வீட்டுக்குள் ரவுடிகள் புகுந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக தர்மல் எஸ்.ஐ அழகிரி மற்றும் ஹைவே பாட்ரோல் எஸ்.ஐ பழனி இருவரையும் உடனே சம்பவ இடத்திற்கு போக உத்தரவிட்டார் டிஎஸ்பி.

அதன்படி காலை 6.30 மணி அளவில் தொப்பலிகுப்பம் கிராமத்திற்கு எஸ்.ஐ அழகிரி, தலைமை காவலர் ரமேஷ், ஹைவே பாட்ரோல் எஸ்.ஐ பழனி ஆகியோர் சென்றனர்.

துப்பாக்கி காட்டி மிரட்டல்

அந்த நேரத்தில் ஒரு பைக்கில் மூன்று பேர் வேகமாக வந்து அங்குள்ள ஒரு வளைவில் மோதி கீழே விழுந்தனர். இதனை பார்த்த எஸ்.ஐ அழகிரி ஓடிப்போய் பிரதாப் என்பவரை மடக்கி பிடித்துள்ளார்.

அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டிய பிரதாப், அதே துப்பாக்கியால் எஸ்.ஐ அழகிரியின் தலையில் தாக்கிவிட்டு தப்பித்து விட்டார்.

rowdy thread sub inspectors
எஸ்.ஐ அழகிரி

இதுகுறித்து உடனடியாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மந்தாரக்குப்பம் எஸ்.ஐ நடராஜன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் எஸ்.ஐ அழகிரி, எஸ்.ஐ நடராஜன் ஆகியோர் வந்திருந்த போலீசாருடன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்றவாளியின் ஊரான கரைமேடு கிராமத்திற்கு சென்று துப்பாக்கியால் மிரட்டிய பிரதாப்பை பிடித்தனர்.

இதனால் ஆக்ரோஷமான பிரதாப், துப்பாக்கியை எடுத்து சுட்டுடுவேன் என்று மிரட்ட, வெறும் கையோடு சென்ற போலீசார் பின் வாங்கினர்.

இதனை பயன்படுத்தி போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடியே மீண்டும் ரவுடி பிரதாப் தப்பித்து விட்டான்.

கடலூர் எஸ் பி சக்திகணேசன் சிஎம் டூட்டி க்கு போனதால், இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன் ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட எஸ்.ஐ களுக்கு ஆறுதல் கூறி விட்டு குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி யிடம் உத்தரவு போட்டுவிட்டு கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டார்.

துப்பாக்கியால் போலீசாரை மிரட்டும் அளவுக்கு அவ்வளவு பெரிய ரவுடியா, மூதாட்டியை கொலை செய்ய வீட்டு கூரையைப் பிரித்து இறங்கும் அளவுக்கு என்ன காரணம் அல்லது கொள்ளையடிக்க வந்தவர்களா என்பது குறித்து விசாரித்தோம்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்களும், களத்தில் இருக்கும் போலீசாரின் நிதர்சனமான நிலைமையும் வெளிவந்தது.

குழந்தையைக் கொன்ற மூதாட்டி

போலீசாருக்கு தொலைபேசி மூலம் புகார் செய்த மூதாட்டி கமலம் சொந்த ஊர் மேலக்குப்பம். இவருக்கு நிறைய நில உடைமைகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு கமலத்தின் வீட்டுக்கு வேலை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ராஜேஸ்வரியின் மகள் ஒருவர் வேர்கடலையை சாப்பிட்டுக் கொண்டு விளையாடியதை பார்த்த மூதாட்டி கமலம் ஆத்திரத்தில் குழந்தையை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் மாடி படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்து குழந்தை இறந்து விட்டது. அந்த மரணத்தை மறைக்க ராஜேஸ்வரியை மிரட்டி முதனை கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் இறந்து போன குழந்தையை புதைத்து விட்டனர்.

இந்த தகவலை அறிந்த ஊமங்கலம் போலீஸார், கமலம், அவரது மகள் ஆஞ்சலை , இறந்து போன குழந்தையின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பணம் கேட்டு மிரட்டிய பிரகாஷ்

மூதாட்டி கமலத்தின் மகள் அஞ்சலை தொப்பிலிகுப்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அந்த ஊரில் உள்ள சுந்தரிக்கும், கரைமேடு சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் நெருக்கமான உறவு இருந்துள்ளது. இதனால் சுந்திரி வீட்டில் தான் அதிகமாக இருப்பார் பிரகாஷ்.

இந்நிலையில் பிரச்சனையில் மாட்டிகொண்ட அஞ்சலைக்கு பிரகாஷை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரி. அவரிடம் தங்களை வழக்கில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டியுள்ளனர் அஞ்சலையும், அவரது தாய் கமலமும்.

இதற்காக கட்டணமாக 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் பிரகாஷ். பின்னர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருகட்டத்தில் கமலம் மற்றும் அஞ்சலையை மிரட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து இருவரும் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் பிரகாஷ் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

போலீஸ் என்று கதவைதட்டிய ரவுடிகள்

இந்த நிலையில் தான் கடந்த 25 ஆம் தேதி காலை 5.00 மணியளவில் பிரகாஷ், அவரது தம்பி பிரதாப் மற்றும் நான்கு பேர் என மொத்தம் 6 பேர் மூன்று பைக்கில் தொப்பிலிக்குப்பம் அஞ்சலை வீட்டுக்கு சென்று கதவைத் தட்டியுள்ளனர். யார் கதவு தட்டுவது என்று அஞ்சலை கேட்க, பிரகாஷ் போலீஸ் என்று கூறியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அஞ்சலை கதவை திறக்காமல் மேலக்குப்பத்தில் உள்ள தம்பி அருள் முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அஞ்சலையுடன் தங்கியிருந்த தாயார் கமலம், டிஎஸ்பி ராஜேந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரவுடிகள் வீட்டுக்குள் வந்துவிட்டார்கள், தங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரகாஷுடன் வந்தவர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி நிலையில், கமலம் மற்றும் அஞ்சலையின் சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஒன்று கூடிவிட்டனர். இதனால் பிரகாஷூடன் வந்தவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறி தப்பித்து விட்டனர்.

காலை 6.30 மணிக்கு அஞ்சலையின் வீட்டுக்கு ஆட்களோடு வந்த அவரது தம்பி அருள் முருகன், பிரகாஷைத் தொடர்புகொண்டு ”ஏன்டா இப்படி என் அம்மாவையும் அக்காவையும் மிரட்டுற, இன்னைக்கு என் கையில் மாட்டியிருந்த அவ்வளவுதான்” என்று மிரட்டியுள்ளார்.

இதில் கோபமான பிரகாஷ், அவனது தம்பி பிரதாப் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் தொப்பிலிக்குப்பம் வரும்போது, அங்கு சரியாக போலீசாரும் வந்துவிட்டனர், போலீசைப் பார்த்ததும் இரண்டு பைக்கில் வந்தவர்கள் உடனடியாக திரும்பி விட்டார்கள்.

பிரகாஷ், பிரதாப் என இருவர் மட்டும் தைரியமாக வந்தபோது வளைவில் இருந்த கட்டையில் மோதி அவர்கள் விழுந்ததும், எஸ்.ஐ அழகிரி ஓடிப்போய் பிரதாப்பை பிடித்துள்ளார்.

உடனே உள் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டி எஸ்.ஐ அழகிரியின் தலையில் தாக்கிவிட்டு பிரதாப் தப்பித்து விட்டான்.

rowdy thread sub inspectors
எஸ்.ஐ நடராஜன்

இதனையடுத்து அடிபட்ட எஸ்.ஐ அழகிரி மற்றும் மந்தாரக்குப்பம் எஸ்.ஐ நடராஜன் தலைமையில் சில போலீசாரும் பக்கத்து ஊரான கரைமேடு கிராமத்திற்கு சென்று பிரதாப்பை பிடிக்க முயன்றுள்ளனர். அங்கேயும் அவன் துப்பாக்கி எடுத்து சுட முயற்சிக்க, எஸ்.ஐ கள் அழகிரி, நடராஜன் மற்றும் போலீசார் பின் வாங்கிவிட்டனர்.

இந்த சம்பவத்தை பற்றி மாவட்டத்தில் உள்ள உள்ள ஒரு காவல் ஆய்வாளரிடம், ”குற்றவாளிகள் துப்பாக்கியோடு அலையும்போது, அவர்களை பிடிக்க போகும் போலீஸ் வெறும் கையோடு போவது சரியா? அல்லது போலீஸ்க்கு துப்பாக்கி இல்லையா?” என்று கேட்டோம்.

துப்பாக்கி இருந்தும் என்ன பிரயோஜனம்?

அதற்கு அவர், “அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள போலீசார் எண்ணிக்கைக்கு ஏற்ப பிஸ்டல் மற்றும் ரிவால்வர் இருக்கும். ஒரு ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ இருந்தால் இரண்டு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வர் இருக்கும்.

இருந்தும் என்ன பிரயோஜனம்? போலீஸ் கையில் லத்தியே இருக்கக் கூடாது என்கிறார்கள். துப்பாக்கி எடுத்து போக எப்படி விடுவார்கள்? அதான் போலீஸ் ரவுடிகளை பார்த்து சல்யூட் அடித்துவிட்டு போகிறோம்.

அதோடு அனைத்து ரவுடிகளும் சாதி கட்சி அல்லது அரசியல் கட்சியை சார்ந்து இருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல ரவுடிகள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அந்த துப்பாகிகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்கிறார்.

கடலூர் மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்கிறார்கள் காவல் துறையினர்.

வணங்காமுடி

அரசே அகற்றிய பெரியார் சிலை!

டான்சர் ரமேஷ் மரணத்தில் மர்மம் : முதல் மனைவி பரபரப்பு புகார்!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0