சென்னை திருவான்மியூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கதிர்வேல் தம்பி சுரேஷ்.
இவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று விட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரவுடி ஓலை சரவணன் வெளியே வந்தார்.
இவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் காய்கறி சந்தைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாரதிதாசன் சாலை அருகே பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ரவுடி ஓலை சரவணனை சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர்.
வெட்டுக் காயங்களால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரவுடி சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்து வந்ததால் கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
உடனே இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுத்தார். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தற்போது கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு வெளியே வந்ததால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி பாலாவை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்ய முயன்றது.
உடனடியாக அங்கிருந்த கோட்டூர்புரம் போலீசார் கும்பலை வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுபோன்று, கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மடுவாங்கரை பகுதியில் ரவுடி சந்திப் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுபோன்று பொதுவெளியில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
காவல் நிலையம் எதிரே பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை!