திருச்சியில் போலீஸாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரன் துப்பாக்கியால் இன்று (செப்டம்பர் 23) சுட்டு பிடிக்கப்பட்டார்
திருச்சியில் ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு தலை வெட்டி சந்திரமோகன் என்பவர் பட்டப்பகலில் தலைவெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதான பிரபல ரவுடியான ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அவர் நேற்று இரவு தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கும் திரும்பும் வழியில், பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், சுரேஷின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார், கொலையில் ஈடுபட்ட நந்த கோபால், ஜம்புகேஸ்வரன், சூர்ய பிரகாஷ், விமல் ராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது ரவுடி ஜம்பு என்கின்ற ஜம்புகேஸ்வரன் காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தற்காப்பிற்காக ஜம்புகேஸ்வரனின் காலில் சுட்டு பிடித்துள்ளார்.
காயமடைந்த ரவுடி ஜம்புகேஸ்வரன் மற்றும் ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு ஆய்வாளர் செந்தில், காவலர் சதீஷ் உள்ளிட்டோர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில் “விசாரணைக்காக ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை அழைத்து செல்லும்போது, காவல்துறையினரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார். அதனால் தற்காப்பிற்காக காவல்துறையினர் அவரை இடது காலில் சுட்டு பிடித்தனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறும். தற்போது கைது செய்யப்பட்ட ஜம்பு மீது 15 வழக்குகள் உள்ளன ” என தெரிவித்தார்.
ஏற்கெனவே தலைநகர் சென்னையில் ரவுடிகளை அடுத்தடுத்து போலீசார் என்கவுன்ட்டர் செய்துவரும் நிலையில், திருச்சியில் தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதா? : காவல்துறை விளக்கம்!
கரகாட்டக்காரன் கனகாவா இது… போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எப்படி?