திருச்சியில் போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகியும் பூக்கடை வியாபாரியுமான ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் நேற்று முன்தினம் செப்டம்பர் 22 ஆம் தேதி, மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று சுரேஷை வழிமறித்து கொலை செய்தது.
தன் கண்முன்னே கணவரை கொலை செய்வதை தடுக்க சென்ற மனைவி ராகினியையும் வெட்டினர்.
இதில் ஆட்டுக்குட்டி சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ராகினி உயர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் 5 ரவுடிகளை போலீசார் நேற்று செப்டம்பர் 23 ஆம் தேதி கைது செய்தனர். அதில் ஒரு ரவுடிதான் ஜம்பு என்ற ஜம்புகேஸ்வரன்.
யார் இந்த ஜம்பு?
8ஆம் வகுப்பு படிப்பை கூட முழுமையாக படிக்காமல் சிறு வயது முதலே விலங்குகளுடன் பழகுவதில் ஆர்வம் காட்டி வந்த ஜம்பு, குதிரை, நாய், யானைகளிடம் பழகி பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.
விலங்குகள் போல ஜம்புவுக்கும் முரட்டுத்தனமான பழக்கமும் இருந்து வந்துள்ளது.
சிறு சிறு சம்பவங்கள் செய்து வந்த ஜம்பு, பின்னர் தலைவெட்டி சந்துரு என்று அழைக்கப்படும் ரவுடியுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் 2020ல் தலை வெட்டி சந்துருவை, ஆட்டுக்குட்டி சுரேஷ் மற்றும் அவரது அண்ணன் சரவணன் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர்.
அதற்கு பழிவாங்கும் வகையில் நேற்று முன்தினம் தலைவெட்டி சந்துரு ஆதரவாளரான ஜம்பு, விமல், சூர்யா, பாலகிருஷ்ணன், ஆகியோர் சேர்ந்து ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷை கொலை செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து திருச்சி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “ ரவுடிகளில் மோசமானவன் ஜம்பு. தமிழகம் முழுவதும் யார் கூப்பிட்டாலும் கூலிக்கு சென்று வரக்கூடியவன். இவன் மீது 18 வழக்குகள் உள்ளன.
ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் ரவுடிகளை பிடிக்க ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் ஒரு டீமை திருச்சி சிட்டி காவல் ஆணையர் காமினி அமைத்தார்.
அப்போது ரவுடியை பிடிக்க செல்லும் போது தற்காப்புக்காக கைதுப்பாக்கியை எடுத்து செல்லுங்கள். ரவுடி ஓட முயற்சி செய்தால் போலீஸ் வேலையை காட்டுங்கள் என்று அனுமதி வழங்கினார்.
அதன்படி நேற்று ஜம்புவை மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகில் அழைத்து சென்றபோது, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீசாரை தாக்க முயன்றதால் முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்” என்கின்றனர்.
“திருச்சி மாநகரில் சின்ன சின்ன ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரையில் சுமார் 500 பேர் உள்ளதாகவும், ஏ பிளஸ் ரவுடிகள் 26 பேர் உள்ளதாகவும் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 245 ரவுடிகள் மீது திருச்சி காவல் ஆணையர் காமினி குண்டாஸ் சட்டத்தில் வழக்கு போட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவர்களிடம் கீழ்மட்ட போலீஸ் மற்றும் சில அதிகாரிகள் தொடர்பில் இருந்ததைக் கண்டுபிடித்த ஆணையர் காமினி நேரடியாகவும் மைக் வாயிலாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்” என்கிறார்கள் திருச்சி போலீஸ் தரப்பில்.
தமிழ்நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை தலைமை முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ரவுடிகளை தரம் பிரித்து அவர்களின் பின்னணியோடு ரிப்போர்ட்களை சேகரித்து வைத்துள்ளனர் போலீசார்.
அதில் டாப் டென் ரவுடிகளின் பட்டியல் எடுத்துக்கொண்டு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.
இப்படி போலீசார் வேட்டையாடுவதை அறிந்து முக்கிய ரவுடிகள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அவர்களையும் விடாமல் கைது செய்ய முயற்சித்து வருகிறது தமிழ்நாடு போலீஸ்.
ஏற்கனவே திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டிருப்பது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி