மத்திய சிறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் குடும்பம் மீது குறிவைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், குடும்பத்தினர் சமயோசிதமாகத் தப்பித்துள்ளனர்.
கடலூர் மத்திய சிறையில் இன்றைய நிலவரப்படி (ஆகஸ்டு 28) விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உட்பட 892 பேர் இருந்து வருகிறார்கள்.
இதில் வெளிப்புற சிறையில் நான்கு கைதிகள் இருந்து வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான கைதிதான் எண்ணூர் தனசேகரன்.
இவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் இருந்தபோது சிறை விதிகளை மீறியதால், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மிக நேர்மையானவர். அவரைப் போலவே உதவி சிறை அலுவலராக இருப்பவர் மணிகண்டனும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்.
சிறையில் கஞ்சா புழக்கம் மற்றும் செல்போன் உரையாடல் இருப்பதாக கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு ஸ்பெஷல் டீம் ரிப்போர்ட் கொடுத்தனர் .
வாரம் ஒரு நாள் ஒரு பிளாக் குறிவைத்து திடீரென பரிசோதனை செய்வது வழக்கம், அப்படித்தான் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் தனசேகரன் இருக்கும் பிளாக் சென்று சோதனை செய்தனர் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான டீம்.
அப்போது தனசேகரன் தனது இடுப்பில் செல்போன் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். இதை எதிர்த்து தனசேகரன் சிறைத் துறை அதிகாரிகளை பார்த்து கண்டபடி பேசியிருக்கிறார். அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அன்று மாலை தனசேகரனை அழைத்து முறைப்படி அட்வைஸ் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தார் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.
இந்த வாக்குவாதத்தின் விளைவாக தனசேகரன் மீது சிறை விதிகள் மீறியதாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது என்கிறார்கள் சிறைத் துறையினர்.
இந்த நிலையில், தனசேகரன் சிறை வார்டன்களிடம், “என்னை சாதாரணமான ஆள்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க. எங்க பசங்களுக்கு தெரிஞ்சா சும்மா விடமாட்டானுங்க. முதல்ல சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கு நான் வைக்கப்போற ஆப்புதான் உங்க அதிகாரியை யோசிக்க வைக்கும் பாரு’ என மிரட்டலாக சொல்லியுள்ளார்.
அந்த தகவல்கள் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கவனத்திற்கு சென்றதும் சில சிம்டம்ஸ்களை பார்த்து மணிக்கண்டனை விடுப்பில் போகவைத்தார்.
இந்த நிலையில்தான் சிறைத் துறையினர் குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் மணிகண்டன் வீட்டில் தீ இன்று (ஆகஸ்டு 28) அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில். என்ன நடந்தது என்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களிடம் விசாரித்தோம்.
” மணிகண்டன் கும்பகோணம் போயிருக்கிறார். அவரது மனைவி பவ்யா, இரண்டு பிள்ளைகள், தந்தை ராமலிங்கம் தாய் சுலோச்சனா ஆகிய ஐந்து பேர் மட்டும் இரவு வீட்டில் படுத்து உறங்கியுள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 28 ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு தீ புகைச்சலும் பெட்ரோல் வாசனையும் வந்ததும், பவ்யா எழுந்து பார்த்துவிட்டு அனைவரையும் வெளியேற்றினார்.
சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கிச்சன் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை அவசரமாக வெளியில் எடுத்து வந்து பெரிய விபத்தை தவிர்த்தனர்.
தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து விட்டு தீ விபத்துக்கான காரணம் மின்சார அடுப்பால் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என குறிப்பு எழுதிக்கொண்டு போயிட்டனர்.
அதன் பிறகு சிறைக் காவலர்கள் மற்றும் முதுநகர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தபோதுதான் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு லிட்டர் அளவுள்ள மூன்று பாட்டில்களில் மொத்தம் ஆறு லிட்டர் பெட்ரோல் நிரப்பி வந்து 4 1/2 லிட்டர் பெட்ரோலை கிச்சன் மற்றும் பக்கத்தில் ஊற்றி தீ வைத்துள்ளனர் மர்ம கும்பல். மீதி ஒன்றரை லிட்டர் பெட்ரோல் பாட்டிலை அப்படியே போட்டுவிட்டு தப்பித்து விட்டனர்.
மணிகண்டனை குடும்பத்தை அழிக்க செய்த சதிவேலையாகவே இது போலீஸாரால் பார்க்கப்படுகிறது. “ஏற்கனவே சிறைக்குள் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில், இந்த சதியை செய்தவர் சிறையில் இருக்கும் எண்ணூர் தனசேகரனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்கிறார்கள் சிறை துறை அதிகாரிகள்.
தற்போது சென்னையின் டாப் 1 ரவுடியான இந்த தனசேகரன், செம்மரக் கடத்தலில் தொடர்புடையவரும் கூட என்கிறார்கள் போலீசார்.
வணங்காமுடி