திருச்சியில் கொம்பன் ஜெகன் என்ற ரவுடி இன்று (நவம்பர் 22) போலீஸ் நடத்திய என்கவுன்டரில் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் கொம்பன் ஜெகன்(30). இவர்மீது கொலை, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் கடந்த மே 19 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுக்கு கறி விருந்து வைத்துள்ளார். அப்போது ஜெகன் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும் ஜெகனின் நண்பர்களும் பட்டா கத்தி, அரிவாளுடன் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக திருவரம்பூர் போலீசார் ஜெகனின் நண்பர்கள் 9 பேரை கைது செய்தனர். ஆனால் ஜெகன் தலைமறைவாகி விட்டார்.
தொடர்ந்து திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் ஜெகன் தலைமறைவாக உள்ளார் என்று திருவரம்பூர் எஸ்.ஐ வினோத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று சனமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த ஜெகனை, எஸ்.ஐ வினோத் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது ஜெகன் பட்டாகத்தியால் எஸ்.ஐ வினோத்தை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனால் தற்காப்பிற்காக எஸ்.ஐ வினோத் ஜெகன் மீது துப்பாக்கியால் 2 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அந்த 2 குண்டுகளும் மார்பில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஜெகனின் உடல் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜெகன் தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
”அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?”: அன்புமணி கேள்வி!
ஷாருக்கானின் செம டான்ஸ்: ‘டன்கி’ அடுத்த அப்டேட்!