கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை செய்தபோது, ரவுடி தனசேகரன் அதிகாரிகளை தாக்கியிருப்பது சிறை அதிகாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிப்புற சிறையில் இரண்டு அறைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு அறையிலும் பத்து கைதிகள் வரை அடைக்கலாம். அதில் ஒரு அறையில் எண்ணூர் தனசேகரன் உள்ளார். மற்றொரு அறையில் கைதி ஷேக் மீரான் உள்ளிட்ட மூன்று பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறையில் அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், ஜெயிலில் இருந்தவாறே தனது ஆட்களை வைத்து கடந்த ஆண்டு ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று மின்னம்பலத்தில் ஒரு கிரைம் தொடராகவே வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 23) காலை 7.00 மணியளவில் ஜெயிலர் தமிழ்மாறன் தலைமையில் சிறைக்காவலர் பிரதீப் உட்பட நான்கு பேர் சிறையில் சோதனை செய்தனர். ரவுடி தனசேகரன் இருக்கும் அறைக்குள்ளும் சோதனை செய்ய சென்றனர்.
அப்போது தனது அறையில் சோதனை செய்யக் கூடாது என்று தனசேகரன் காவலர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதை மீறி சோதனை செய்த போது சிறைக்காவலர் பிரதீப்பை தாக்கியுள்ளார் தனசேகரன். அப்போது அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தகவல் தெரிந்து மற்ற சிறைக் காவலர்கள் உள்ளே சென்று சோதனை செய்து தனசேகரனை கண்டித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கேட்டதும் உடனடியாக கடலூர் மத்திய சிறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார். இதைப்பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறி, தனசேகரன் காவலரை தாக்கியது பற்றி போலீசாரிடம் புகார் கொடுங்கள் என பரிந்துரை செய்தார்.
அதன்படி, தனசேகரன் மீது முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் உதயக்குமார், தனசேகரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தார்.
இதையடுத்து தனசேகரன் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். காவல் ஆய்வாளர் உதயக்குமாரிடம், “சிறையில் செல்போன் வைத்திருந்ததாக சிறை அதிகாரிகள் பொய் கூறி தனசேகரன் மீது பழி போடுகிறார்கள். நீங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுங்கள்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய காவல் ஆய்வாளர் உதயக்குமார், தனசேகரனிடம் இருந்து பறிமுதல் செய்த செல் போனை ஆய்வு செய்தார். கால் டீடெய்ல்ஸை ஆராய்ந்ததில் தனசேகரன் சிறையிலிருந்தபடி கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியிருப்பதும், சென்னையை சேர்ந்த 8 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசியிருப்பதும், அந்த எண்கள் எல்லாம் தற்போது சுவிட்ச் ஆஃப்பில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
சிறைக்குள் என்ன நடந்தது என்று நாம் விசாரித்தோம்…
சிறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தனசேகரன் சிறைக்குள்ளும் ரவுடியிசத்தைக் காட்டுகிறான். சிறைக் காவலர்களை மிரட்டுகிறான். கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அவனது அறையில் சோதனை செய்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தோம். அதனால் தனசேகரனுக்கு சிறை சலுகைகள் ஒரு மாதம் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு கண்காணிப்பாளர் நடத்திய மனு நாளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் தனசேகரன் அறைக்கு நேரடியாக சிறை கண்காணிப்பாளர் சென்றபோது படுத்துக்கொண்டே பதில் சொன்னார். இதனால் சிறை சலுகைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது 2023 ஆகஸ்ட் 23 வரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நேற்று தனசேகரன் அறைக்கு சோதனைக்கு சென்றோம்.
அப்போது, ‘எனக்கு ஏ கிளாஸ் அறை கொடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியும், டிவி, இல்லை, கட்டில் மெத்தை இல்லை, கடிகாரம் இல்லை, சேர் இல்லை. எனக்கு போனில் பேச அனுமதி கொடுப்பிங்களா இல்லையா என கேட்டு தனசேகரன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் சிறைக்காவலர் பிரதீப்பை கீழே தள்ளி தாக்கினார்” என்றனர்.

ஏ கிளாஸ் கைதிக்கு என்னென்ன வசதி கொடுக்கப்படும் என்று கேட்டதற்கு,
“கைதிகள் கால் மிதியை அவர்களது சொந்த செலவில் வாங்கிக் கொள்ளலாம், மெத்தை டிவி எங்களிடம் தற்போது இருப்பு இல்லை. கைதிகள் விருப்பம் இருந்தால் சொந்த பணத்தில் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு அனுமதி உண்டு” என்றவர்கள்,
தொடர்ந்து, தனசேகரன் உறவினர் ஒருவர் திமுக வழக்கறிஞராக இருக்கிறார், திமுக ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு நல்ல பதவியும் கொடுத்துள்ளது திமுக தலைமை.
அதனால் சிறை அதிகாரிகள் தனசேகரனுக்கு பயப்படுவார்கள். பயப்படாத சில அதிகாரிகள் மீது கேசு கீசுனு போட்டு அலைக்கழிப்பார்கள். அப்படித்தான் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” என்று கூறினர்.
தனசேகரனால் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
-வணங்காமுடி
மணிப்பூருக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா