பிரபல ரவுடி தனசேகரன் தற்கொலை முயற்சி… நடந்தது என்ன?

தமிழகம்

கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சிறை விதிகளை மீறியதால், கடந்த ஆண்டு கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடலூர் சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான குழு 2022 ஆகஸ்ட் 8 அன்று தேடுதல் சோதனை நடத்தியது. அப்போது தனசேகரன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் மீது கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதவி சிறை அலுவலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சிறையிலிருந்தபடியே தனசேகரன் கூலிப்படை மூலம் இதைச் செய்ததாக வழக்கு பதிவானது.

இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை 1.30 மணியளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் தனசேகரன். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கடலூர் சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில்,
“கடலூர் சிறையில் சொகுசான முறையில் இருக்க முடியவில்லை என்றும் புழல் சிறைக்கு மாற்றச் சொல்லி தனசேகரன் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், அதோடு வீட்டுப் பிரச்சினை, தன்னுடன் நம்பிக்கையோடு இருந்தவர்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் சிறையில் தினசரி தனசேகரன் புலம்பி வந்தார்” என்று கூறுகின்றனர்.

“இன்று அதிகாலை தான் அதிகமான மாத்திரைகள் போட்டுவிட்டதாகப் பாதுகாப்பிலிருந்த மாலிக் மற்றும் தமிழரசன் ஆகிய சிறைக் காவலர்களிடம் தனசேகரன் கூறினார்.

உடனடியாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செந்தில்குமார் சிறையில் உள்ள மருத்துவமனையில் தனசேகரனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அப்போது தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பிபி மாத்திரையான அம்லோடிபின் 29, அல்பிராக்ஸ் 2, சிபிஎம் (அவில்) 2 என மொத்தம் 31 மாத்திரைகள் சாப்பிட்டேன் என கூறினார்.

சிறை மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளித்த பிறகு சிறை மருத்துவர் விமல்தாஸ், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தனசேகரனை மாற்ற பரிந்துரை செய்தார். இதனால் தனசேகரன் 8 காவலர்கள் பாதுகாப்புடன் கடலூர் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு காலை 3.04 மணிக்குத் தாய் வார்டில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட தனசேகரனுக்கு மருத்துவர் யக்னேஷ்வர ராஜா சிகிச்சை அளித்தார். ரைல்ஸ் டியூப் மூலம் தனசேகரனின் வயிறு சுத்தம் செய்யப்பட்டது.

இதன்பின் பரிசோதனை செய்ததில் தனசேகரனுக்கு இதயத்துடிப்பு, பிபி என அனைத்தும் சரியாக இருந்தது. எனினும் தனசேகரனுடன் வந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப் பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்” என்று சிறைத் துறை தரப்பில் தெரிவித்தனர்.

rowdy dhanasekaran attempted suicide

தனசேகரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரித்தோம்.
”இன்று காலை கடலூர் மருத்துவமனையில் தனசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை, 5.30 மணிக்கு பணிக்கு வந்த மருத்துவர் சங்கீதா, ”தனசேகரன் நல்லாதான் இருக்கிறார். எதற்கு முண்டியம்பாக்கத்துக்கு மாற்ற வேண்டும்?” என கேட்டார்.
இருப்பினும், தனசேகரன் தொடர்பான சர்ச்சையால் பாதுகாப்பு கருதி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தனசேகரன் சொன்ன மாத்திரைகளான இரண்டு ஆல்பிராக்ஸ் மற்றும் இரண்டு அவில் மாத்திரை போட்டால் தூக்கம் அதிகமாக இருக்கும். அரைத்தூக்கத்தில் இருப்பது போலவே இருக்கும், மற்றபடி 29 அமோலபிடின் மாத்திரை விழுங்கியதாகச் சொல்வதை எல்லாம் நம்ப முடியவில்லை. காரணம் பிபி , இதய துடிப்பு எல்லாம் நார்மலாக இருக்கிறது. சிறை அதிகாரிகளை மிரட்டுவதற்கு இப்படிப் பொய் சொல்லி இருக்கலாம்” என்று மருத்துவர்கள் கூறினர்.

தனசேகரன் சொல்வது உண்மை என்றால், அவருக்கு அமோலடிபின், ஆல்பிராக்ஸ், அவில் மாத்திரைகள் எப்படிக் கிடைத்தன? யார் உதவி செய்தது என்று சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் விசாரணை செய்து வருகிறார்.

-வணங்காமுடி

வாய்ப்பு தந்த இயக்குநர்: ஓரங்கட்டும் மாதவன்

1427 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *