எண்ணூர் தனசேகரனை மின்னம்பலம் வாசகர்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
கடலூர் மத்தியச் சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி அதிகாலை சமையலறை ஜன்னல் மூலமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது மர்ம கும்பல்.
அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அனைவரும் தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்த கடலூர் போலீஸார் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் எண்ணூர் தனசேகரன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கண்டுபிடித்தனர். இது தொடர்பாக தனசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் விரிவான பார்வையை குற்றவாளிகளுடன் போலீஸ் கூட்டணி: சிறையில் இருக்கும் உண்மைகள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் மினி தொடராகவே வெளியிட்டோம்.
அந்தத் தொடரில், எண்ணூர் தனசேகரனை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கச் சட்ட ரீதியான முயற்சிகள் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம், அதன்படியே மத்தியச் சிறையிலிருக்கும் தனசேகரனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்காக போலீஸார் அழைத்தனர்.
‘என்னை என்கவுன்ட்டர் செஞ்சிடுவீங்க சார் வேணாம் சார்’ என்று மறுத்திருக்கிறார் தனசேகரன்.
செப்டம்பர் 21ஆம் தேதி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மத்தியச் சிறைக்குச் சென்று தனசேகரனை சந்தித்து, ‘உன்னை நாங்கள் என்கவுன்ட்டர் பண்ணமாட்டோம்.
ஜெயிலரை குடும்பத்தோடு அழிக்கக் கொலை முயற்சி நடந்ததைப் பற்றி விசாரிக்கத்தான் அழைக்கிறோம் வா’ என்று தாஜா செய்து வெளியே அழைத்து வந்தார்.

காலை சுமார் 10.30 மணியளவில் லைட் ப்ளூ ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை சட்டை, பிய்ந்து போன செருப்புடன் சிறையிலிருந்து வெளியில் வந்து போலீஸ் வேனில் ஏறினார் எண்ணூர் தனசேகரன்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேன் நீதிமன்றம் வந்தது. நீதிமன்றத்தில் மனைவி தனலட்சுமி, சென்னை திருச்சி மற்றும் கடலூர் வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.
தனசேகரன் காலில் உள்ள செருப்பைப் பார்த்த தனசேகரனின் ஆதரவாளர்கள், ’அண்ணன் போடும் ஷுவே 45 ஆயிரம் இருக்கும். இப்ப என்னாடான்னா இப்படி பிஞ்ச செருப்போட வர்றாரே?” என்று வேதனைப்பட்டனர்.
எண்ணூர் தனசேகரனை மாஜிஸ்திரேட் வனஜா முன் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் போலீஸ் கஸ்டடி எடுக்க முறைப்படி உத்தரவு பெற்று செப்டம்பர் 21 ஆம் தேதி மதியம் 12.00 மணியளவில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்துக்கு தனசேகரனை அழைத்துச் சென்றனர் போலீஸார்.
போலீஸ் ஸ்டேஷன் அழைத்துப் போனபோது மதிய சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. ‘என்ன சாப்பிடுறே?’ என்று போலீஸார் கேட்டபோது சிக்கன் 65, பிரியாணி வேண்டும் என கேட்டார் தனசேகரன். அதையே வாங்கிக் கொடுத்தனர் போலீஸார்.
அப்போது, ”சார் சட்டை இல்லை சார், வீட்லேர்ந்து சட்டை வாங்கிட்டு வந்திருக்காங்க. அதை வாங்கிக்கலாமா சார்?’ என்று கேட்டிருக்கிறார் தனசேகரன். சரி என்று அவரது மனைவி வாங்கி வந்திருந்த புது சட்டையை வாங்கி தனசேகரனிடம் கொடுத்தனர் போலீசார்.
தனசேகரன் புது சட்டை வாங்கிப் போட்டுக் கொண்ட பிறகு விசாரணை தொடங்கியது… கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரிகள் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ். ஐ. மணிகண்டன் உள்ளிட்ட டீம்தான் தனசேகரனை விசாரணை செய்தார்கள்.
விசாரணையில் என்ன நடந்தது என்பதை அப்படியே லைவ்வாக மின்னம்பலம் வாசகர்களுக்குத் தருகிறோம்…

“உன் மேல மொத்தம் எத்தனை கேஸ் இருக்கு தெரியுமா?”
” இந்த (கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில்) ஸ்டேஷன்ல இப்ப போட்டிருக்கிற கேஸோட சேர்த்தா மொத்தம் 55 கேஸ் இருக்கும் சார்” என்றார் தனசேகரன்.
அப்போதுதான் தனசேகரனின் வலது கையில் ஒரு பெண் படம் பொறிக்கப் பட்டிருப்பதையும், இடது கையில் துப்பாக்கி படம் பொறிக்கப் பட்டிருப்பதையும் பார்த்தனர் விசாரணைக் குழுவினர்.
‘அதென்னய்யா இந்த கையில பொண்ணு படம், அந்த கையில துப்பாக்கி படமெல்லாம் பச்சை குத்திருக்கே?” என்று கேட்டனர்.
“அது ஒண்ணுமில்ல சார். இந்தா வலது கையில இருக்குறது என்னோட பொண்ணு படம். என் மகள்னா எனக்கு உசிரு சார். அதான் பச்சை குத்திக்கிட்டேன். இந்த பக்கம் இடது கையில இருக்கிறது சாதா துப்பாக்கி இல்ல சார் ஆர்மி துப்பாக்கி” என்றார் தனசேகரன்.
”ஆர்மி துப்பாக்கிய நீ எதுக்கு பச்சை குத்தி வச்சிருக்கே?” உடனே கேள்வி வந்தது.
“சார்…நான் சின்ன புள்ளையிலயே ஆர்மிக்கு போகணும்னு ஆசைப்பட்டேன் சார். அப்ப நடந்த ஆர்மி செலக்ஷனுக்கு வீட்டுக்கு தெரியாம போயி கலந்துக்கிட்டேன்.
உடம்பு ஃபிட்டா இருந்து, ஹைட்டு, செஸ்ட் அளவு எல்லாமே சரியா இருந்துச்சு. என்னை செலக்ட் பண்ணிட்டாங்க சார். ஆனா வீட்டுக்கு நா ஒரே புள்ளைங்கிறதால ஆர்மிக்கு போகக் கூடாதுனு எங்க அப்பா அம்மா தடுத்துட்டாங்க சார்.
என்னோட ஆர்மி கனவு அப்படியே போயிடுச்சு சார். அதான் கையில ஆர்மி துப்பாக்கிய ஆசை ஆசையா குத்திக்கிட்டேன்” என்று தனசேகரன் சொன்னபோது விசாரணை அதிகாரிகள் உண்மையிலேயே வியந்து போய்விட்டார்கள்.

’’ஏண்டா… ஆர்மிக்கு போக வேண்டிய ஆளை சுத்தி இப்படி போலீஸ் நிக்கிற மாதிரி ஆயிட்டியே இது நல்லாருக்கா?” என்று கேட்டார் டிஎஸ்பி.
அப்போது தனசேகரன் சிரித்துக் கொண்டே, “சார்… ஆர்மி மட்டுமில்ல நான் போலீஸ் எக்சாமும் எழுதிட்டேன் சார். அதுக்குள்ள வம்பு வழக்குனு ஆகி இப்படி வந்துட்டேன் சார்” என்றார் ரிலாக்ஸாய்.
’ஆர்மி, போலீஸுங்குறே ஆனா இப்படி ரவுடித் தனம் செஞ்சுக்கிட்டிருக்கியே… நாங்க உன்னை வெளிய விட்டாலும் உன்னோட எதிரிங்க போட்டுத் தள்ளிடுவாங்கன்ற பயமே உனக்கு இல்லை” என்று கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
அதற்கு எண்ணூர் தனசேகரன், “எனக்கு எதிரினு யாருமே இல்லை சார். எல்லாமே சப்பை பசங்க. நேருக்கு நேராக வரமாட்டானுங்க.
வந்தானுங்கன்னா எங்கிட்டேர்ந்து தப்பிச்சு போக மாட்டானுங்க. அது அவங்களுக்கும் தெரியும். ஏதாவது பின்னாடில இருந்து செஞ்சாதான் சார் உண்டு” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.
கொஞ்ச நேரம் ரிலாக்ஸாய் போன விசாரணை அப்புறம்தான் இறுகியது.
”நீ செஞ்ச முத கொலை என்ன?” இப்படித்தான் ஆரம்பித்தது விசாரணையின் அடுத்த அத்தியாயம்.
“2004 ல ஒண்ணு பண்ணேன் சார். அதுக்குப் பிறகு நான் நேரடியாகப் போகமாட்டேன் அந்தந்த ஏரியாவில் ஆள் வச்சி காரியத்தைக் கச்சிதமாக முடிச்சிடுவேன். 2016ல விழுப்புரத்தில ஒரு அரசியல் கொலை. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த இருசப்பனை வச்சிதான் முடிச்சேன்” என்று பட்டியல் போட்டார் தனசேகரன்.
”சரி அதெல்லாம் இருக்கட்டும்… சொல்லு, சப் ஜெயிலர் வீட்டுல தீ வைச்சி அவர குடும்பத்தோட அழிக்கணும்குற அளவுக்கு உனக்கு என்னா வெறுப்பு?”
“சார்… சத்தியமா சொல்றேன் சார். வீட்ல அவரோட பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்கனு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்படி செய்ய சொல்லியிருக்க மாட்டேன்.
அந்த மணிகண்டன் மட்டும்தான் இருப்பார்னு நினைச்சுதான் ஆபரேசனை செய்யச் சொன்னேன். நான் வெளிய வந்து முதல்ல வார்டன் விநாயகத்தைத்தான் அடிக்கலாம்னு நினைச்சிருந்தேன் சார்.
ஆனா பசங்க மணிகண்டன் தான் காரணம்னு தெரிஞ்சதும் அவருக்கு குறிவச்சிட்டாங்க” என்று சொல்லியிருக்கிறார் தனசேகரன்.

”வார்டன் விநாயகம் என்னடா பண்ணாரு உன்னை?” அடுத்த கேள்வி வந்து விழுந்தது.
“சார்…ஆயிரக்கணக்கான ரூபா கொடுத்து ஒரு ரோலிங் சேர் வாங்கி ஜெயிலுக்குள்ள வச்சிருந்தேன் சார். அதை என் கண்முன்னாலேயே உடைச்சுப் போட்டுட்டாரு விநாயகம்.
அப்புறம் மணிகண்டன் என்னடான்னா என்னோட ஸ்மார்ட் போனை எல்லாம் எடுத்துட்டு போயிட்டாரு. அதான் எனக்கு செம்ம கோவம்” என்றிருக்கிறார் தனசேகரன்.
“ஏண்டா…. ஜெயில் என்ன உன்னோட மாமியார் வீடா, உன்னோட இஸ்டத்துக்கு சேர் போட்டு உட்கார்றதுக்கும், போன் பேசுறதுக்கும்?” என டிஎஸ்பி அதட்ட… தனசேகரன் அலட்டிக் கொள்ளாமல், “ சார், நான் ஒரு பட்டதாரி.
இன்கம் டேக்ஸ் கட்டிக்கிட்டிருக்கேன். எனக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் கொடுக்கணும் சார்” என்றார் அழுத்தமான குரலில்.
“நீ இப்பவே ஃபர்ஸ்ட் கிளாஸ் மாதிரிதானே இருந்திருக்க, அசைவம் சாப்பிடாம இருக்க மாட்டீங்களோ?” என்று அதிகாரி கேள்வி கேட்க,

“ சார் அப்படியெல்லாம் இல்ல சார். வாரத்துல வியாழன், வெள்ளி, சனி மூணு நாள் விரதம் சார், சைவம்தான் சாப்பிடுவேன். மத்த நாலு நாள்லதான் மட்டன், சிக்கன், மீனு எல்லாமே சாப்பிடுவேன்” என்றபோது அதிகாரிகள் தலையில் அடித்துக் கொண்டனர்.
21 ஆம் தேதி இரவு முழுதும் முதுநகர் காவல் நிலைய மேல் மாடியில் தனசேகரனை வைத்திருந்த போலீஸார் மறுநாள் 22 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தனசேகரனை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தனசேகரனிடம் பேசியதில் அவர் செய்த தவறுகளை உணர்வதுபோல் தெரியவில்லை.
எனக்காக என் பிள்ளைங்க (ஆதரவாளர்களைத்தான் அப்படி சொல்கிறார்) உயிரையே கொடுப்பார்கள், எதை வேணும்னாலும் செய்வாங்க. எனக்கு தமிழ்நாட்ல மட்டுமில்ல வெளி மாநில ஜெயில்லயும் ஆளுங்க இருக்காங்க’ என அலட்டிக் கொள்ளாமல் சொல்கிறார் தனசேகரன். அவருடைய குடும்பத்தினர் நண்பர்களும் கூட ரவுடிகள் போலவே வாழ விருப்பப்படுகிறார்கள்.
ஏதாவது ஒரு குற்றம் செய்துவிட்டு சரண்டர் ஆவது, வழக்குகளைச் சந்திப்பது, வெளியே போவது, மீண்டும் குற்றம் செய்வது என்பதை பலபேருக்கு சாதாரண காரியம் என்ற உணர்வை தனசேகரன் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
அடிப்பது, மிரட்டுவது, கொலை செய்வது என்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம் போல ஆகிவிட்டது. இது சமூகத்துக்கு பெரிய ஆபத்து” என்கிறார்கள் சீரியசாக.
–வணங்காமுடி
குமரி: சுரேஷ் ராஜனை முடக்கிய ஸ்டாலின் – தனிக்காட்டு ராஜாவான மனோ தங்கராஜ்