அடுத்தவருக்கு குறிவைத்து வெடிகுண்டு செய்த ரவுடி கவலைக்கிடம்! 

Published On:

| By christopher

அரசியல் எதிரியை குறிவைத்து வெடிகுண்டு செய்தபோது, தவறுதலாக வெடித்ததில் கைகள் சிதறிபோய் பிரபலமான ரவுடி ஒருவர் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த 15ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமான ரவுடியான மணல்மேடு சங்கரும், மண்ரோடு சந்திரனும் தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்து வந்தனர்.

மணல்மேடு சங்கர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, பின்னர் சிறைக்கு திரும்பியபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

போலீஸ் தேடும் குற்றவாளியாக இருந்த மண்ரோடு சந்திரன்  பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஸ்கார்பியோ காரில் திரும்பி வரும் வழியில் பிரேக் ஃபெயிலியராகி விபத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

மண்ரோடு சந்திரன் மற்றும் மணல்மேடு சங்கர் இருவரின் மறைவுக்குப் பிறகு இரண்டு கோஷ்டியும் சிதறியது.

எனினும் மணல்மேடு சங்கர் குரூப்பில் இருந்த ஒருவர் தான் பண்டாரவாடை கலைவாணன். 

தஞ்சாவூரிலிருந்து 22 கிலோமீட்டர் கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பண்டாரவாடை கிராமத்தில் வசித்து வருகிறார்.

முக்கிய அரசியல் எதிரி ஒருவருக்கு ஸ்கெட்ச் போட்டு அவரைத் தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகளை வாங்கிவந்து அதில் உள்ள மருந்துகளை எடுத்து, நேற்று முன்தினம்(மே13) இரவு 9.15 மணியளவில் நாட்டு வெடிகுண்டு செய்தார்.

தனது வீட்டுத் தோட்டத்தில் இரண்டு வெடிகுண்டு செய்தவர் மூன்றாவது வெடிகுண்டு செய்தபோது தவறி வெடித்ததில் இரண்டு கைகள் சேதமானது மற்றும் நெஞ்சு, தொடை பகுதியில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ரவுடி பண்டாரவாடை கலைவாணன் பற்றி போலீஸில் விசாரித்தபோது, அவர் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளன. 

இவர் பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். இவர் யாரை கொல்வதற்கு வெடிகுண்டு தயாரித்தார் என்று எஸ்.பி.நிஷா தீவிரமாக விசாரித்து வருகிறார் என்கிறார்கள் மாயவரம் போலீஸார்.

வணங்காமுடி

முதல்வர் பதவிக்கு மோதல்: சிவக்குமார், சித்தராமையாவின் அடுத்த மூவ் என்ன?

போட்டித் தேர்வுகள்: அரசு மணிமண்டபங்களைப் பயன்படுத்த இறையன்பு அறிவுறுத்தல்!