ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் உள்ள 2 வீடுகள் மீது இன்று (டிசம்பர் 1) பாறை சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் வ.உ.சி.நகர் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
எனினும் விழுப்புரம், கடலூரை சுழற்றியடித்த கனமழை, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தை வேட்டையாடி வருகிறது.
அங்கு மலை அடிவாரத்தில் இருந்த 2 வீடுகளின் மீது இன்று மதியம் திடீரென பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் அந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த வீடுகளில் 7 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி. சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புத் துறையினர் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் சரிந்த மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், இரவானதாலும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்ததும் மீட்பு பணி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள் இருந்ததாக கூறப்படும் 7 பேரின் நிலை என்ன என்பது அவர்களின் உறவினர்களையும், அக்கம்பக்கத்தினரையும் அச்சப்பட வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பேய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?