திருடுபோன இருசக்கர வாகனத்தை எந்தவிதமான டாக்குமென்ட்களும் இல்லாமலேயே போலியான விலாசத்திற்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த விவகாரம் பற்றி சென்னை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் ஆர்டிஓ ஆபீஸில் காலையில் ஒருவர் உள்ளே புகுந்து ஆர்சி புத்தகங்களை திருடிச் சென்றார். இப்போது திருட்டு இருசக்கர வாகனத்தை எந்தவொரு டாக்மென்ட்டுகளும் இல்லாமல் போலியான விலாசத்திற்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்.
கடந்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை குமரன் நகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமுதராஜ் என்பவருக்குச் சொந்தமான பல்சர் பைக்கை (TN 09 CR 0814), திருட்டுக் கும்பல் ஒன்று திருடிச் சென்றுவிட்டது. அது சம்பந்தமாக அன்றே குமரன் நகர் காவல் நிலையத்தில் அவர் புகாரும் கொடுத்துவிட்டார்.
சென்னையில் திருடுபோன பல்சர் பைக், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்த அமுதராஜ், பதறிப்போய் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போன் செய்து விபரத்தைக் கேட்டபோது அவர்கள், அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
வேறு வழி தெரியாத அமுதராஜ் மீண்டும் குமரன் நகர் காவல் நிலையத்தில் முறையிட, தகவலறிந்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ பாலு தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீம் அமைத்து பொறுப்பை ஒப்படைத்தார். எஸ்ஐ பாலு கடலூர் மாவட்டம் பற்றி நன்கு அறிந்தவர். இதையடுத்து, அவர், தீபாவளிக்கு முன்பு ரகசியமாக வந்து முழுமையாக விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 28) மீண்டும் தனது ஸ்பெஷல் டீமுடன் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கு முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய அவர், அதுதொடர்பானவர்களை குறிவைத்து பிடிப்பதற்காக, விழுப்புரத்துக்கு மதுராந்தகம் மார்க்கமாக புறப்பட்டார்.
இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக முக்கிய நபர்களிடம் விசாரித்தோம். ”கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் சுதாகர். இவர் பலமான தொகையை கொடுத்துத்தான் கடலூர் வந்துள்ளார். ஆபீஸ் சைட்டின் அட்மின் பாஸ்வேர்டை, தனது அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளர் சாந்தியிடம் கொடுத்துள்ளார் ஆர்டிஓ.
ஆனால் கடலூர் கண்காணிப்பாளர் சாந்தி, கிளார்க் கவிதா, ஆர்டிஓ சுதாகர் ஒப்புதலுடன் ஒரிஜினல் ஆர்சி புக் இல்லாமலேயே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் அபாஸ் பெயருக்கு மாற்றியுள்ளனர்” என்றார்கள்.
இந்த வேலையை செய்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் வினோத் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். “விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பவர். எனக்கு அவ்வப்போது பெயர் மாற்றம் செய்யச் சொல்லி வேலை கொடுப்பார். ஒரு ஆர்சி புக் பெயர் மாற்றத்திற்கு 1,500 ரூபாய் கொடுப்பார்.
இந்த மாதம் மட்டும் ஐந்து வண்டி பெயர் மாற்றம் செய்யக் கொடுத்தார். அதில் நான்கு வண்டிக்கு ஒரிஜினல் ஆர்சி புக் கொடுத்தவர், ’ஒரு வண்டி ஆர்சி புக் காணாமல் போய்விட்டது. அந்த வேலையை எப்படியாவது முடித்துக் கொடு’ என்றார்.
’சரி’ என்று நானும் சொல்லி, சென்னை கும்மிடிப்பூண்டியில் வேலை செய்யும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த அமீர் அபாஸ் பெயரில், அவர் கடலூர் மாவட்டத்தில் வசிப்பதுபோல் நோட்ரிக் பப்ளிக் வழக்கறிஞரிடம் அபிடவிட் வாங்கி, இந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி பெயர் மாற்றம் ஆர்டர் ஆனது” என்றார் மிகவும் கூலாக.
விழுப்புரம் ஜெயசங்கருக்கு சென்னை வண்டி எப்படி கிடைத்தது என்று விசாரித்தோம். ”மதுராந்தகத்தில் தீபக் என்ற சேட்டு (மார்வாடி) திருட்டு வண்டிகளை சொற்ப பணம் கொடுத்து அடமானமாகவோ அல்லது விலைக்கு வாங்கியோ விற்பனை செய்துவிடுவார்.
அந்த தீபக்தான் சென்னையில் திருடுபோன பல்சர் பைக்கை ஜெயசங்கருக்கு விற்பனை செய்துள்ள விபரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மார்வாடி தீபக் என்பவரை பிடித்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் பல பைக் திருடர்களை கை காட்டுவார்” என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
வணங்காமுடி
கமெண்ட்ரி களத்தில் கனா வீராங்கனை!
தேவர் ஜெயந்தி விழா: போக்குவரத்து மாற்றம்!