கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். robbery in kovai jos alukkas
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நகைக்கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்த சாலையில் தான் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது.
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து ஊழியர்கள் வழக்கம் போல் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து இன்று (நவம்பர் 28) காலை கடையைத் திறந்து பார்க்கும் போது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. உடனே ஊழியர்கள் கடை உரிமையாளருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் நகைக்கடைக்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் நகைக்கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சண்முகம் நகைக்கடையில் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரத்தினபுரம் போலீசார் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களை வரவழைத்தும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
ஆனால் கடையில் இருந்து எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரவில்லை. ஊழியர்கள் சோதனை செய்து பார்த்த பிறகே எவ்வளவு நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.
கோவை நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சேரி மொழி பேச்சு: குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
15 ஆண்டுகளுக்கு பிறகும் ஆச்சரியத்தை அதிகரிக்கும் ”பூ” திரைப்படம்!
robbery in kovai jos alukkas