உயரும் தனியார் பால் விலை!

தமிழகம்

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் விலையை உயர்த்த உள்ளன. விலை உயர்வை தடுத்து நிறுத்த தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. நாளை முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது.

பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விலை உயர்த்தப்படுகிறது என தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சமன்படுத்தப்பட்ட பால் 50 ரூபாயிலிருந்து 52 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

நிலைப்படுத்தப்பட்ட பால் விலை 62 ரூபாயிலிருந்து 64 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

நிறைகொழுப்பு பால் விலை 70 ரூபாயிலிருந்து 72 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தயிர் விலை 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் மத்திய கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி எழுதியுள்ள கடிதத்தில்,

“அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் ஈடுபட்டு வரும் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள்,

பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி நாளை (20.01.2023) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00 ரூபாய் உயர்த்துவதற்கான அறிவிப்பை சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பால் கொள்முதல் விலை உயர்வில்லாமல் கடந்த ஓராண்டு காலமாக அதே நிலையில் நீடித்து வரும் போது கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை பால் விற்பனை விலையை அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் உயர்த்தியது.

Rising private milk prices

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டில் 3 முறையும், 2020ல் கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னர் 3 மாதங்களில் 2 முறையும் அதே பொய்யான காரணத்தை கூறி பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின.

2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட போது பால் வணிகமும் ஓரளவிற்கு பாதிப்பை சந்தித்தது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை வரலாறு காணாத வகையில் குறைத்தன.

குறிப்பாக ஒரு லிட்டர் பாலினை 18.00 ரூபாய் வரை மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக குறைத்து வழங்கி கொள்முதல் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தன.

ஆனால் பொதுமக்களுக்கான விற்பனை விலையில் சிறிதளவு கூட குறைக்க முன் வராததோடு, பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான லாபத்தை உயர்த்தி வழங்கவும் முன்வரவில்லை.

அதன் பிறகு கொரோனா நோய் பெருந்தொற்று கால ஊரடங்கு முடிந்து தமிழ்நாட்டில் இயல்புநிலை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பப் தொடங்கி, பால் வணிகமும் சீரடையத் தொடங்கியதும்,

2022ம் ஆண்டில் தங்களுக்கான பால் வரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே 2020, 2021ல் கடுமையாக குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் படிப்படியாக உயர்த்தி கொடுக்கத் தொடங்கி கொரோனா காலகட்டத்திற்கு முன்பிருந்த நிலைக்கு பால் கொள்முதல் விலையை கொண்டு வந்தன.

அதே சமயம் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி 2022ம் ஆண்டில் மட்டும் நான்கு முறை பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையை ஏற்படுத்தின.

இதனை தடுக்க வேண்டிய மாநில அரசோ செயலற்ற நிலையில் இருந்து கொண்டு நாங்கள் ஆவினை மட்டுமே நிர்வகிப்போம், கட்டுப்படுத்துவோம் எனக்கூறி தங்களின் பொறுப்பை தட்டிக் கழித்து தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது.

நினைத்த போதெல்லாம் பால் கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது,

விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையை சுமத்துவது என தங்களின் சுயநலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,

பொதுமக்கள் நலன் மீது கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கும், அவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தனியார் பால் நிறுவனங்களின் மக்கள் விரோத, தொடர் விற்பனை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவில் நிர்ணயம் செய்யவும் தமிழ்நாடு அரசு தவறுவதாலும், மாநில அரசும், அதிகாரிகளும் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிப்பதாலும்,

தனியார் பால் நிறுவனங்களின் சர்வாதிகார போக்கினை தடுத்து நிறுத்திடவும், தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்திடவும், தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்திடவும் மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரியா

ஈரோடு கிழக்கில் போட்டியிடப் போவது யார்? – கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை!

2006ல் கணவர் 2023ல் மனைவி: பலியான பைலட் தம்பதி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *