ஆ.ராசாவை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸ் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பீளமேடு அருகே நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை ஒருமையில் பேசியதோடு போலீஸ் காவல் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் காலை வைத்துப் பாருங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் தந்தை பெரியார் குறித்தும் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் இரு பிரிவினர்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று(செப்டம்பர் 21) காலை பீளமேடு போலீசார் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின் அவர் மீது கலகத்தை தூண்டுதல், வேண்டுமென்றே ஒரு நபரை அவமதித்து எரிச்சல் ஊட்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ததை அறிந்த கட்சி தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
200க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்த நிலையில் அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதுபோன்று பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த முதல்வரின் போஸ்ட்டரை கிழித்து எரிந்தனர். ஆ.ராசாவின் உருவ பொம்மையும் எரித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதோடு அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது காரை விடாமல் வழிமறித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர் பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அதிகாலை என்பதால் நீதிபதி வீட்டிலேயே விசாரணை நடந்தது. இதை அறிந்து கொண்ட பாஜகவினர் நீதிபதியின் வீட்டிற்கு அருகில் வந்து போராட்டம் செய்தனர்.
நீதிபதி இல்லம் அருகே குவிந்த பாஜகவினர் காவல்துறைக்கு எதிராக முழக்கம் செய்தனர். இதையடுத்து காவல்துறை அவர்களையும் குண்டுக்கட்டாக கைது செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடையே பேசிய உத்தம ராமசாமி இந்த வழக்கை சட்ட பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், 1 சதவீதம் கூட பின்வாங்க போவதில்லை எனவும் தெரிவித்த அவர், என் தாய்மார்கள், சகோதரிகள் குறித்து எவன் பேசினாலும் விடமாட்டோம் என்றார்.
கலை.ரா