ஏழைகளின் உணவு பணக்காரர்கள் உணவாக எப்படி மாறியது?

Published On:

| By Minnambalam Desk

நா.மணி

அரசு ஊழியத்தை விட்டு விட்டு இயற்கை விவசாயம் செய்துவரும் அறச்சலூர் செல்வம் மகள் திருமணம். முற்றிலும் சிறுதானிய உணவுகள் வகை விருந்து. பலரும் விரும்பி உண்டனர். என் இணையர் உட்பட்ட பலர் சமையல்காரரிடம் முகவரி அட்டை பெற்று சென்றனர். தற்போது வெகு ஆடம்பர திருமணங்களில் கூட, ஓரிரு பதார்த்தங்களாவது சிறுதானிய உணவில் இடம் பெறுகின்றன. சிறுதானிய சிற்றுண்டி வகைகள் பிஸ்கட் வகையில் பரவலாக விற்பனைக்கு வந்துள்ளது. Rich Food VS Poor Food 2025

உடல் ஆரோக்கியம் காக்க சிறுதானியங்களுக்கு ஓர் பெரிய பங்கு இருக்கிறது என்று பரவலாக பேசக் கேட்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே நாங்கள் குத்தகை விவசாயம்.‌ எங்கு விவசாயம் செய்து வந்தோமோ அதே மண்ணில் கூரை வேய்ந்த சாளை அமைத்து அங்கேயே குடியிருந்து வந்தோம். அப்போதைய எங்கள் சாகுபடியில் முக்கியமானது ராகி, கம்பும் சோளமும் பயிரிடுவோம். உணவுத் தேவைக்குப் போக மீதமே சந்தைக்கு போகும்.

பண நெருக்கடியால் பெரும் பகுதி தானியம் சந்தைக்கு செல்லும் நேரமும் உண்டு. மூன்று வேளையும் ராகிக் களி‌. சோளச் சோறு. சோளத்தில் அம்புலி காய்ச்சி அருந்துவதும் உண்டு. அம்புலி காய்ச்சு குடிப்பது என்பது ஒருவகை உணவு. தானியம் பற்றாக்குறையாக இருக்கும் போது நீராகாரம் மாதிரியான ஓர் ஏற்பாடு இது. கேழ்வரகில் தயாரிப்பது கூல். எப்போதாவது அரிசி சாப்பாடு.

அரிசி உணவு Rich Food VS Poor Food 2025

ஆனால் எங்களுக்கு முந்தைய தலைமுறை அளவு அரிசி சோறு பற்றாக்குறை இல்லை. “ஆடிக்கு ஓர் அன்னம் கண்டா, அண்ணன் கலியாணத்திற்கு ஓர் அன்னம்” என்பது அந்தக் காலத்தை நினைவூட்டும் சொலவடை. அப்போதே மூன்று வேளை அரிசி உணவு சாப்பிடுபவர்கள் ஊருக்குள் இருந்தார்கள். அவர்களைப் போன்றவர்களே ஒட்டுமொத்த உணவு முறையையும் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

மூன்று வேளையும் அல்லது குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்களாக ஒரு சிறுபகுதி இருந்தார்கள். எண்ணிக்கையில் சிறிய அளவே. ஆனால் அவர்களே பெரும்பகுதி மக்களால் மிகவும் கௌரவமாக நடதப்பட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் எல்லா ஊர்களிலும் முன் கை எடுத்த உணவுதான் இப்போது எல்லோரது மூன்று வேளை உணவு மாறிப்போய் ஆகிப் போனது.

இதன் காரணமாக நாங்கள் சாகுபடி செய்த மண்ணில் மட்டுமல்ல எங்களைப் போன்ற எல்லோரது மண்ணிலும் ராகி கம்பு சோளம் சாகுபடி அற்றுப் போய்விட்டது. இவற்றுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மவுசு காரணமாக அதே மண்ணில் அதே ராகி கம்பு சோளம் சாகுபடி துளிர்க்கலாம். முன்பு இருந்ததைக் காட்டிலும் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று நினைக்கலாம். Rich Food VS Poor Food 2025

ஆனால் அங்குள்ள எதார்த்த நிலைமைகளை பரிசீலனை செய்யாமல் அது சாத்தியமா என்று கூற இயலாது. எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வந்தோம். ஒன்பதாம் படிக்கும் போதும் எங்கள் பிரதான உணவு இராகி களியாகவே இருந்தது. ராகி கம்பு சோளத்தை உணவாகக் கொள்ளும் நிலப்பரப்பிலிருந்தே பெரும்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்கள்.

சுமார் இரண்டாயிரம் பேர் படித்த பள்ளி அது. எங்கள் வகுப்பில், என்னைத் தவிர வேருயாரும் இராகிக் களியை மதிய உணவாக கொண்டு வரவில்லை. எல்லா வீடுகளிலும் இராகி சோளம் பிரதான உணவாக இருந்தாலும் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கென்று கொஞ்சம் அரிசி சாதம் செய்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.‌ அதுதான் கௌரவமாக பார்க்கப்பட்டது.‌ பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு அப்படித்தான் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற கலாச்சாரமாகவே பின்பற்றப்பட்டது. Rich Food VS Poor Food 2025

பள்ளி வரும் மாணவர்கள் தங்கள் மதிய உணவு டிபன் பாக்ஸை, ஜன்னலில் ஓரிடத்தில் வைத்திருப்பார்கள். இடைவேளையின் போது எல்லாவற்றையும் நீக்கிப் பார்ப்பார்கள் சில மாணவர்கள். சுவைத்தும் பார்ப்பார்கள். நான் தினந்தோறும் கொண்டு செல்லும் இராகி களியும் தயிரும் எல்லோருக்கும் தெரிந்து விடும். அவர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தால் என்னோடே அதை அதை வைத்துக் கொள்வேன்.‌ யாரும் அதனைத் தொடாமல் பார்த்துக் கொள்வேன். Rich Food V

S Poor Food 2025

மதிய உணவு இடைவேளையின் போது எங்கள் ஊரிலிருந்து பள்ளிக்கு வரும், நான் கொண்டுவரும் மதிய உணவை அறிந்த நண்பன் ஒருவனோடு, யாரும் பார்க்காத வகையில் தனியாக சென்று அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வருவேன். சாப்பிட்டு முடித்த பிறகு எல்லோரும் ஒன்றாக கை கழுவும் இடம். அங்கும் மிகுந்த கவனமாக இருப்பேன். கை கழுவி முடிக்கும் வரை இராகி களி சாப்பிட்டது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று வகையில் என் நடவடிக்கைகள் இருக்கும்.

ஒன்பது, பத்து வகுப்புகளில் இப்படி ஒளித்து ஒளித்து வைத்து சாப்பிட்டு வந்த நான், பிளஸ் டூ சேரும் போது இன்னும் கொஞ்சம் பெரியவனாகி இருந்தேன். பெண்களும் சேர்ந்து படிக்கும் வகுப்பாக எங்கள் மேல்நிலைப் பள்ளி கல்வி அமைந்திருந்தது. உயர்நிலைப் பள்ளியில் வெட்கத்துடன் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து சாப்பிட்டு வந்த எனக்கு, மேலும் வெட்கம் அதிகரித்தது. மதிய உணவு எடுத்து வருவதையே நிறுத்தி விட்டேன்.

மேல்நிலைப் பள்ளி கல்வி முடிக்கும் வரை மதிய உணவு இடைவேளையின் போது, எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எங்கெங்கோ சுற்றி விட்டு, மீண்டும் வகுப்பறைக்கு திரும்புவேன்.‌ மாணவர்கள் கேட்டால் நகருக்குள் சென்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று பொய் உரைப்பேன். போராடி பள்ளிக்கு அனுப்பி வைக்க முடிந்த என் பெற்றோர்களால், எனக்கென்று கொஞ்சம் அரிசி வாங்கி, தனியாக சமைத்து கொடுக்க வசதியும் இல்லை. வாழ்க்கைப் பாடும் அவர்களுக்கு இடம் தரவில்லை.

பெற்றோரை வற்புறுத்தி அரிசி சோற்றுக்கு வழி செய்து கொண்டு பள்ளி வந்தோர் இருந்தார்கள். எனக்கு ஏனோ அப்படி அடம் பிடித்து அல்லது போராடி அரிசி உணவு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் எடுத்துச் செல்லும் உணவை எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட அஞ்சினேன். என்னைப் போன்று அப்போது படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அரிசி சாதம் பள்ளிக்குக் கொண்ட வர முடியாததாலும் மதிய உணவைத் தியாகம் செய்யத் தயாராக இல்லாததாலும் பள்ளியை துறந்தவர்கள் படிப்பை துறந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள்.‌

பள்ளி மாணவர்களுக்குள் வரும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளின் போது கூட, இது பிரதிபலித்தது. “போடா கூல் குடிக்கும். …..” என்று சாதி சொல்லித் திட்டிய மாணவர்கள் உண்டு. எந்த சிறுதானிய உணவுவைக் கொண்டு வந்து சாப்பிடுவது அவமானம் என்று கருதப்பட்டதோ அதே சிறுதானிய உணவு மீண்டும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் கௌரவமான உணவாக வடிவம் பெற்றுவிட்டது.‌ Rich Food VS Poor Food 2025

மாற்றுப் பயிர் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த விவசாயிகள் அனைவரும் சிறுதானிய சாகுபடியை நிறுத்திய பிறகு, மீண்டும் அதே சாகுபடிக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆனால் மீண்டும் அவர்களால் அதனை சாகுபடி செய்ய இயலுமா என்பதே ஓர் ஆய்வுக்குரியது.

பாரம்பரிய உணவு முறையை மாற்றியது எது?

பாரம்பரியமாக கேழ்வரகு சோளம் கம்பு தினை என்று உற்பத்தி செய்து சாப்பிட்டு வந்த மக்களை மென்று தின்றது எது? எல்லோரையும் அரிசி உணவை நோக்கித் தள்ளியது எது? நமது பாரம்பரிய உணவு முறையை மாற்றியது எது? Rich Food VS Poor Food 2025

அன்று பணம் படைத்தவர்கள் உணவு அரிசி . இன்று பணம் படைத்தவர்கள் உணவு அன்று அவர்கள் புறக்கணித்த சிறுதானியங்கள். ஏன் இந்த நகை முரண்? நாம் உண்டு வந்த கேழ்வரகை இன்னும் ரசித்து ருசித்து ‘முத்தே முத்தே’ என்று ஏழை பணக்காரன் என்று எல்லோரும் அதனை முத்தமிட்டு உண்கிறார்கள்? நம்மவர்கள் வெட்கித் தலைகுனிந்து மறைத்து வைத்து உண்ணும் உணவாக இராகி களி ஏன் மாறியது?

பணமே மனத்தை தீர்மானிக்கிறது. ஒரு கட்டத்தில் ‘பணக்காரர்களை பின்பற்றுவதே மாண்பு’ என்று மாறி விடுகிறது. அதுவே பண்பாடாக திரிபு அடைகிறது. இதற்காக ஏழைகள் கொடுத்த விலை எவ்வளவு? அதனை எப்படி மதிப்பீடு செய்வது? அவர்களே சாகுபடி செய்து அவர்களது உணவுத் தேவை போக மீதத்தை விற்று வாழ்ந்து வந்தனர். உண்ணவும் முடியவில்லை. நல்ல விலையும் கிடைக்கவில்லை. இவர்களை சார்ந்து வாழ்ந்து வந்த விவசாய தொழிலாளர்கள் நிலையும் அதுவே. இது பற்றியெல்லாம் எந்தவித பார்வையோ கேள்வியோ இல்லாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். Rich Food VS Poor Food 2025

சிறுதானியங்களின் பயன்பாடு

5000 ஆண்களுக்கு முன்பிருந்தே சிறுதானியங்களின் பயன்பாடு நம் மண்ணில் இருப்பதாக சொல்கின்றோம். கேழ்வரகு சோளம் கம்பு தினை குதிரைவாலி… “இந்த உணவில் நல்ல புரதச் சத்து உள்ளது. நார் சத்து நிறைந்தது என்கிறோம். வைட்டமின்கள் உள்ளது. இரும்பு கால்சியம் மக்னீசியம் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. உடல் எடையை கட்டுப்படுத்த உகந்த உணவு” என எல்லோரும் நம்புகிறார்கள். Rich Food VS Poor Food 2025

இதெல்லாம் தாண்டி ‘பருவநிலை மாற்றத்திற்கான உணவு’ என்றெல்லாம் பேசுகிறோம். இவ்வளவு சிறந்த உணவின் பயன்பாடு அதனை ஒட்டிய வாழ்வில் பொருளாதார சுழற்சி முறிந்த பிறகு மீண்டும் மறு கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

கேழ்வரகு சாகுபடி அகில இந்திய அளவில் 1975-76 ஆம் ஆண்டு 2629.50 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது. 2019-20 ல் 1004.46 ஹெக்டேராக குறைந்து விட்டது. இதே காலகட்டத்தில் 2796.60 ஆயிரம் டன்னாக இருந்த கேழ்வரகு சாகுபடி 1755.06 ஆயிரம் டன்களாக குறைந்து விட்டது.

தமிழ் நாட்டை பொறுத்த மட்டில், 1975-76ல் 319.90 ஹெக்டர் நிலத்தில் கேழ்வரகு சாகுபடி நடந்து வந்தது. ஆனால் 2019-20ல் 84.54 ஹெக்டராக குறைந்து விட்டது. 1975-76ல் 479.20 ஆயிரம் டன்கள் சாகுபடி செய்யப்பட்டு கேழ்வரகு, உற்பத்தி 274.50 டன்களாக குறைந்து விட்டது.

அதேசமயம், அன்று முதல் இன்று வரை கேழ்வரகு உணவு விருப்ப உணவாக இருந்து வரும் கர்நாடகாவில் 1975-76 ஆம் ஆண்டு 1048.30 ஹெக்டர் நிலப்பரப்பில் நடைபெற்று வந்த கேழ்வரகு சாகுபடி, 641.00 ஹெக்டராக குறைந்துள்ளது. ஆனால், கேழ்வரகு சாகுபடி 1164.06 ஆயிரம் டன்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. Rich Food VS Poor Food 2025

தமிழ் நாட்டை காட்டிலும் நான்கு மடங்கு கேழ்வரகு சாகுபடியாகிறது. சிறுதானிய உணவின் முக்கியத்துவம் அறியப்பட்ட பிறகு, உலகின் 40 விழுக்காடு சிறுதானியங்களை சாகுபடி செய்யும் இந்தியாவின் முன் முயற்சியின் விளைவாக 2023 ஆம் ஆண்டை “சிறுதானிய ஆண்டாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. Rich Food VS Poor Food 2025

தேசிய உணவு உத்தரவாத சட்டம், பொது விநியோக முறையில் சிறுதானியங்கள் வழங்கல் சிறுதானிய உணவு திருவிழாக்கள் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் வழியாக சிறுதானிய உணவுகள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவை வசதி படைத்தவர்கள் உணவாகவே உள்ளது.

எல்லோருக்குமான உணவாக அதனை உருமாற்றம் செய்ய முடியுமா?

கட்டுரையாளர்

Rich Food VS Poor Food 2025 by N Mani

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share