பருவமழையால் கண்டுள்ள நல்ல விளைச்சல் காரணமாக தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அரிசி விலை குறைய உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாக நெல் அறுவடையானது சம்பா, குறுவை என இரண்டு போகங்களாக நடைபெறும். அதன்படி சம்பா சாகுபடியில் 75 சதவீத விளைச்சலும், குறுவை சாகுபடியில் 25 சதவீதம் விளைச்சலும் கிடைக்கும்.
ஆனால் கடந்த 2023ம் ஆண்டு வழக்கமான பருவ மழை இல்லாமல் குறைவாக பெய்து ஏமாற்றம் அளித்தது. அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, உற்பத்தி 3.7 சதவீதம் குறைந்தது. மேலும் சன்னரக அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023ல் 60 கிலோ நெல்மூட்டை ரூ.1700 முதல் ரூ.1800 வரை இருந்தது. அரிசி விலையும் ஏற்றம் கண்டது.
இந்த நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழைகளும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால் நெல் விளைச்சல் அதிகமானது.
குறுவை சாகுபடியை தொடர்ந்து தமிழகத்தில் சம்பா சாகுபடியும் தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி வந்த பயிர்கள் மூழ்கின.
அதே வேளையில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் அமோகமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் வழக்கமாக 130 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் நிலையில், இம்முறை அதிகபட்சமாக 140 மில்லியன் டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்கூட்டியே கணித்து தான் அரிசி ஏற்றுமதிக்கான தடையையும், சுங்க வரியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விளைச்சல் அதிகரிப்பால் அடுத்த மாதத்தில் இருந்து அரிசி விலையானது கிலோவுக்கு ரூ.2 முதல் 3 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.