பட்டியலினத்தவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் இரு சமூக மக்களும் விசாரணைக்கு ஆஜராக கோட்டாட்சியர் இன்று (ஜூன் 7) சம்மன் அனுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு பல காலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வழிபட சென்றுள்ளனர்.
அப்போது மற்றொரு சமூக மக்கள் பட்டியலின மக்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட தங்களுக்கு உரிமை உண்டு எனத் தொடர்ந்து பட்டியலின மக்கள் போராடி வந்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 முறையும், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் 7 முறையும் என 9 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இன்று சீல் வைத்தார். மேலும், மேல்பாதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் 2,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இரு சமூக மக்களும் வரும் 9 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பியுள்ளார்.
மோனிஷா
பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கோவிலுக்கு சீல்!
WTC Final : ஆஸ்திரேலியாவை வெல்லத் துடிக்கும் இந்தியா… 3 முக்கிய காரணங்கள்!