உயர்நீதிமன்றங்களில் எத்தனை எஸ்.சி., எஸ்.டி., நீதிபதிகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நீரஜ் டாங்கியின் கேள்விக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2018 முதல் நியமிக்கப்பட்ட 698 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 108 பேர் பெண்கள், 22 பேர் எஸ்சி, 15 பேர் எஸ்டி, 87 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பதிலளித்தார். Retired Judge Chandru Shock
இந்தநிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (பிப்ரவரி 17) செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர், நீதிபதிகள் நியமனத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தில் 79 விழுக்காடு உயர்சாதியை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பட்டியலினம் 2 சதவிகிதம், சிறுபான்மையினர் 2 சதவிதம் பேர் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் உயர்சாதியை சேர்ந்தவர்கள் 10 சதவிகிதம் பேர் கூட இல்லை. ஆனால், மீதமுள்ள 90 சதவிகிதம் மக்களில் 20 சதவிதம் பேர் மட்டுமே நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், சமீபத்தில் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நீதிபதிகள் நியமனத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம் என்கிறார். எத்தனை பெண்கள் உயர்நீதின்றத்தில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்று நெறியாளர் கேட்டபோது, அதற்கு அவரிடம் சரியான பதில் இல்லை.
சந்திரசூட் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்ணை கூட நீதிபதியாக பரிந்துரைக்கவில்லை. ஆகவே அவரது பேச்சு ஒருபக்கம், நடைமுறை ஒருபக்கமாக இருக்கிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பதவி உயர்வு குறிப்பில், மற்ற அனைத்து திறமைகளையும் விட இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் என்று கொலிஜியம் தெரிவித்துள்ளார்கள்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் 34 சதவிகிதம் பேர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கொலிஜியம் நடைமுறை என்பது ரகசியமான நடைமுறையாக இருக்கிறது.
பெரும்பான்மையான நீதிபதிகள் நீதிபதிகளின் சொந்தக்காரர்களாக அல்லது மூத்த வழக்கறிஞர்களின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். பல ஆயிரம் வழக்கறிஞர்கள் மத்தியில் ஒரு சிறிய குழு ஆதிக்கம் செலுத்துகிறது.
தமிழக உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதி நியமனங்கள் காலியாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகளை பரிந்துரை செய்ய வேண்டும். இது ஏதோ நீதித்துறை பிரச்சனையாக கருதாமல் முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு வேண்டாதவர்கள் நீதிபதிகளாக முடியாது. ஒன்றிய அரசுக்கு வேண்டியவர்கள் பதவிக்கு வரலாம் என்ற நடைமுறை தற்போது உள்ளது” என்று தெரிவித்தார். Retired Judge Chandru Shock