கோவை வனப்பகுதியில் பெண் புலியின் சடலம் மீட்பு!
கோவை வனப்பகுதியில் உயிரிழந்த பெண் புலியின் சடலத்தை வனத்துறையினர் இன்று (ஜூன் 15) கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் போன்ற ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் அதிகளவில் புலிகள் வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது இந்த புலிகள் சமதள பகுதியான கோவை மாவட்டத்தின் அருகேயும் வந்து செல்கின்றன.
இதேபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளும் உணவு, குடிநீர் தேவைக்காக கோவை மாவட்ட சமதள பகுதிகளின் அருகே வருவது இயல்பாக நடப்பவையாகும்.
இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியில் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஓலியூர் வனப்பகுதியில் வனத்துறையினர் இன்று (ஜூன் 15) காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நீலகிரி கிழக்கு சரிவு சோழமாதேவி வனச்சரகத்தில் புலி ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டறியப்பட்டது.
உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது உயிரிழந்த புலி 9 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதும், இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கழுத்தில் பலத்த காயம் அடைந்த இந்த பெண் புலி உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய புலிகள் காப்பகத்தின் விதிமுறைகளின்படி, சூழலியல் ஆர்வலர்கள் முன்னிலையில், உயிரிழந்த புலியின் உடலுக்கு மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் உடலை அங்கேயே எரியூட்டினர்.
இந்த புலி நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இருந்து வந்ததா அல்லது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து தவறி இங்கு வந்ததா என்பது தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மெலோடி” : வைரலாகும் மெலோனி, மோடி செல்ஃபி வீடியோ!
Bye Bye Pakistan: பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்!