new year celebration in kovai valankulam

புத்தாண்டு கொண்டாட்டம்… : குளங்களின் மீது நடத்தப்படும் வன்முறை!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

இன்னும் 3 நாட்களில் 2024 புத்தாண்டை வரவேற்க உள்ளோம். புத்தாண்டு என்றாலே இரவு 12 மணிக்கு பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். ஆனால் இந்த கொண்டாட்டங்களின் மூலம் இயற்கைக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் அங்கு உள்ள பலவகையான பறவைகளுக்கு துன்புறுத்தலாக அமையும் என்றும் கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓசை காளிதாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் இணைந்து கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தியினை அறிந்து இயற்கை ஆர்வலர்கள் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

குடும்பத்துடன் கொண்டாட்டம், மது இல்லாமல் கொண்டாட்டம் ஆகிய கவர்ச்சியான வார்த்தைகளோடு லியோ பட பாடல் வெளியீட்டின் போது நடைபெற்றது போல் 300 சுருபூர்திகள் (drons) பறக்க விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20,000 எல்.இ.டி விளக்குகளுடன் ஒலி – ஒளி காட்சிகளும் நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான இடமாக குளக்கரையை தேர்ந்தெடுத்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் குளங்களும் ஏரிகளும் உலக அளவில் ஆகச்சிறந்த நீர் மேலாண்மை அமைப்புகள் என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலேயே பொழிந்து நமது ஆறுகளுக்கு ஆதாரமாக இருந்தாலும் பெரும் பகுதி நிலப்பரப்பு வடகிழக்கு பருவ மழையையே சார்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழைப்பொழிவு சீராக இருக்காது. குறைந்த நாட்களில் பெருமளவு கொட்டி தீர்த்து விடும். அதனால் மழைக்காலத்தில் வெள்ளமும் பிறகு வறட்சியும் நிலவும் . இந்த நிலையை மாற்ற குளங்களும் ஏரிகளும் வெட்டப்பட்டன. எவ்வளவு பெருமழை பெய்தாலும் அவற்றை தேக்கி வைக்கும் வண்ணம் தொடர் ஏரிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஏரிகளை மேலாண்மை செய்ய தனித்துவமான சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அவை அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் உருவாக்கப்பட்ட நீர்மேலாண்மை அமைப்புகள். போரின் வெற்றியை குளம் வெட்டி கொண்டாடிய மரபு நம்மிடம் இருந்திருக்கிறது. “நீர் மேலாண்மையை பற்றி அறிய வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு செல்லுங்கள். அங்கு ‘ஏரி தொழில்நுட்பம்’ எனும் சிறப்பான நீர் சேமிப்பு முறையை காணலாம்” என்று புகழ்பெற்ற நீரியல் நிபுணர் சாண்டா போஸ்டல் போன்றவர்களால் வியந்து பாராட்டப்பட்டது நமது நீர் மேலாண்மை அமைப்பு.

கோவையில் உள்ள குளங்களும் அப்படித்தான் உருவாக்கப்பட்டன. நொய்யல் ஆறு காவிரியின் துணையாறு. ஒரு காலத்தில் சோழ நாட்டின் துயராக நொய்யல் கருதப்பட்டது. இப்போது உள்ள கே.ஆர்.எஸ் அணை, மேட்டூர் அணை போன்றவை கட்டப்படாத காலத்தில் காவிரி கரைபுரண்டு ஓடும். மழைக்காலத்தில் அந்த வெள்ளம் பல மடங்காகும். அதற்கு முக்கிய காரணமாக நொய்யல் இருந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் கோயம்புத்தூர் உள்ளது. இங்கிருந்து பாயும் நொய்யல் ஆற்றில் மழைக்காலத்தில் பெருவெள்ளம் சீற்றத்துடன் காவிரியில் கலக்கும். அதனை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டவையே இங்குள்ள தடுப்பணைகளும் குளங்களும்.

நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை தடுப்பணைகள் மூலம் தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு கொண்டு சென்றனர். நில அமைப்புக்கு ஏற்றவாறு ஆற்றின் இருபுறமும் அடுத்தடுத்து தொடர் குளங்கள் வெட்டப்பட்டன. ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம் குளங்களை நிரப்பி மீண்டும் ஆற்றுக்கு செல்லும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதனால் வெள்ளம் மேலாண்மை செய்யப்பட்டதோடு இப்பகுதியின் நீர் வளம் பெருகி வேளாண்மை தழைத்தது.

அப்படி உருவாக்கப்பட்ட குளங்களில் ஒன்றுதான் வாலாங்குளம். நொய்யலில் இருந்து பெரியகுளம் வரும் நீர் வாலாங்குளம், புளியகுளம், அம்மன்குளம் ஆகியவற்றை நிரப்பி சங்கனூர் பள்ளம் வழியாக மீண்டும் நொய்யலை அடையும். இப்போது புளியகுளம், அம்மன்குளம் ஆகியவற்றில் பெயரில் மட்டுமே குளங்கள் உள்ளன. குளங்களை நகரம் விழுங்கிக் கொண்டது.

ஒரு காலத்தில் இப்போதுள்ள திருச்சி சாலைவரை கரைபுரண்டு வாலாங்குளத்தில் தண்ணீர் இருந்திருக்கிறது. அதன் தென்பகுதியில் பெரும் பரப்பில் இருந்த வயல்களை வாழ வைத்திருக்கிறது. வாலான் வகை அரிசி விளைய உதவியதால் இப்பெயர் வந்திருக்கலாமென சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோவைக்கு சிறுவாணி, பவானி ஆற்றுத்தண்ணீர் குடிநீருக்காக கொண்டுவரப்பட்டதாலும் நகரத்தின் வேக வளர்ச்சியில் விளைநிலங்களில் கட்டிடங்கள் முளைத்த பிறகும் குளங்களுக்கும் மக்களுக்குமான நேரடி உறவு அறுந்து போனது.

ஆனால் வேறு வகையில் இக்குளங்கள் பரிணமிக்க தொடங்கின. அவை பறவைகளின் வாழ்விடமாக மாறின. உள்ளூர் பறவைகள் ஆண்டு முழுவதும் குடியிருக்க வீடாகவும் வெளியூர் பறவைகள் சில மாதங்கள் வந்து போகும் வாழ்விடமாகவும் குளங்கள் உருப்பெற்றன. தொலைதூர நாடுகளில் இருந்தும் சில பறவைகள் இங்கு வலசை வருகின்றன. எட்டு பெரிய குளங்கள் கோவை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ளன.

நகரமயமாதலின் கோர விளைவால் அக்குளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. ஆற்றுக்கும் குளத்துக்கும் இடையிலான உறவும் குளங்களுக்கு இடையிலான இணைப்பும் அருகிப் போயின. மெல்ல மெல்ல சாக்கடை நீர் நிரம்பும் இடமாக மாறின. குளங்களிலேயே கட்டிடக்கழிவுகளும் நகரக் கழிவுகளும் கொட்டப்பட்டன. குளங்களை ஆக்கிரமித்து பேருந்து நிலையங்கள், மின் நிலையங்கள் உள்ளிட்ட அரசின் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அழகிய குளங்கள் கோவையின் அவலமாக மாறிவிட்டன.

இந்தச் சூழலில் தான் கோவையின் குளங்களை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியை ‘சிறுதுளி ‘ அமைப்பு தொடங்கியது. பசுமை உள்ளம் கொண்ட தொழில் நிறுவனங்களின் நிதி உதவியோடும் அக்கறை கொண்ட பொதுமக்களின் பங்களிப்போடும் குளங்கள் தூர்வாரப்பட்டன. நம்பிக்கை வெளிச்சம் ஒளிரத் தொடங்கியது. நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் விதைக்கப்பட்டது. அதன் விளைவாக பல்வேறு துறைகளில் பணி புரிந்த இளைஞர்களை சமூக ஊடகங்கள் வாயிலாக இணைத்து குளங்களை தூர்வாரும் மகத்தான பணியை ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ தொடங்கியது.

அருவருக்கும் சாக்கடைகளில் இறங்கி நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் இளைஞர்கள். கோவை மாவட்டம் முழுவதும் பல குளங்கள் இயற்கை ஆர்வலர்களால் தத்தெடுக்கப்பட்டு உள்ளூர் மக்களின் பங்களிப்போடு பாதுகாப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கௌசிகா நீர் கரங்கள் எனும் அமைப்பு தொடங்கப்பட்டு பல குளங்கள் மக்களால் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயமுத்தூர் இயற்கையாளர்கள் சங்கம் குளங்களுக்கு வரும் பறவைகளை முறையாக ஆவணப்படுத்தியது.

new year celebration in kovai valankulam

இப்படி அக்கறை கொண்டவர்களால் நீர் நிலைகளின் பாதுகாப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. நீர் நிலைகளை பாதுகாக்கவே அத்திட்டம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குளங்களில் தண்ணீரின் தரம் மிக மோசமாக உள்ளது. எனவே சாக்கடை நீர் நேராக குளங்களில் கலக்காமல் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். அதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ வேறு. குளங்களை அழகுப்படுத்துகிறோம் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் கரை முழுதும் கான்கிரீட் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பல நூறு கோடி செலவு செய்யப்பட்டது. குளங்களின் அழகு அழுக்கற்ற தண்ணீரில்தான் இருக்கிறது என்கிற அடிப்படை அறிவு இன்றி பணம் விரயமாக்கப்பட்டது. அழுக்கு உடலில் ஆடம்பர ஆடை அணிந்ததுபோல் இப்போது குளங்கள் காட்சி தருகின்றன. நீர்நிலைகள் உயர்ந்த உயிர்ச் சூழல் கொண்டவை என்பது மறைக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மட்டுமே பார்க்கப்பட்ட தவறான திட்டமிடலின் கோர விளைவுகள் இவை.

குளங்களை பறவைகள் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றன. சில பறவைகள் ஆழமான பகுதிகளையும் வேறு சில ஆழம் குறைந்த கரையோர பகுதிகளையும் பயன்படுத்துகின்றன. குளக்கரை புதர்கள் பல பறவைகளுக்கு குஞ்சுபொரிக்கும் இடமாக இருக்கிறது. குளக்கரையில் உள்ள மரங்கள் வேட்டையாடும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறுவகை பறவைகளுக்கு ஓய்விடமாகவும் வாழ்விடமாகவும் உதவுகின்றன. எனவே பாசனத்திற்கு நேரடியாக பயன்படாத குளங்களை மேலாண்மை செய்யும்போது தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அறிவியல் முறைப்படியே அவற்றை ஆழப்படுத்த வேண்டும். கரையில் உள்ள உயிர் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அண்மையில் இந்திய பறவைகள் நிலை பற்றிய ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் 1.4% மட்டுமே குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட ஈர நிலங்கள் உள்ளன. உலக அளவில் 49% பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஆழமற்ற பகுதிகளிலும் கரைகளிலும் வாழும் பறவைகள் (Waders) வலசை பறவைகள் (Migratory birds) வேட்டையாடும் பறவைகள் (Raptors) ஆகியவை பெருமளவில் குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் வாலாங்குளம் பல அரிய பறவைகளின் வாழ்விடமாக விளங்குகிறது . இக்குளத்தை,

கூழைக்கடா (Pelican), குளத்து நாரை (Pond heron ), நத்தை கொத்தி ( open billed stork) , கரண்டி வாயன் (Asian spoon bill ), உப்புக் கொத்தி (Little ringed plover), உள்ளான் (Little stint ), சீழ்க்கைச் சிறகி (Lesser whistling duck), தட்டைவாயன் (Northern shoveler), இராக் கொக்கு (Night heron ), வண்ண நாரை (Painted stork), பாம்பு தாரா (Darter ), நீர்க் காக்கை (Cormorant), உள்ளிட்ட சுமார் 100 வகையான பறவைகள் பயன்படுத்துவதாகப் பறவை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேலும் இங்கு உப்புக் கொத்தி, நீல வால் பஞ்சுருட்டான் (Blue-tailed bee – eater) ஆகிய பறவைகள் தொலைதூர நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் இங்கு வலசை வருகின்றன. அவ்வகையில் எண்ணிறந்த வகைப் பறவைகள் வலசை வரும் காலம் இது. குளக்கரையில் உள்ள மரங்கள் பல விதமான பறவைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகிறது.

இந்தச் சூழலில் ட்ரோன்கள் பறக்க விடப்படுவதும், காதைக் கிழிக்கும் ஒலி கண்ணைப் பறிக்கும் ஒளியை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களைத் துன்புறுத்தும் செயலாகும்.

எனவே, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்கிற பெயரில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட செயல்களை நமது குளக்கரைகளில் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும்.

கடந்த 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் யுனெஸ்கோ அமைப்பின் முயற்சியால் ஏரி, குளம் உள்ளிட்ட ஈர நிலங்களை பாதுகாக்க பன்னாட்டு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அங்கீகரிக்கப்படும் நீர் நிலைகள் உலக அளவில் கவனம் பெறும்.

நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அண்மையில் தமிழகத்தில் உள்ள 11 நீர்நிலைகள் புதிதாக ராம்சர் பகுதிகள் என அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழக அரசால் இரண்டு புதிய பறவைகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கெனத் தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை நீர் நிலைகளின் மீது அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில் கோவையில் குளத்தின் உயிர்ச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகளை அனுமதிப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக ‘ஓசை இயற்கைக்கான குரல்’  சுற்றுச்சுழல் அமைப்பின் செயலாளர் அவை நாயகன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எதிர்வரும் புத்தாண்டை ஒட்டி டிசம்பர்’31 இரவு கோவை, வாலாங்குளத்தில், பெரும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அதில் 300 ட்ரோன்கள் பறக்க விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 எல்.இ.டி விளக்குகளுடன் ஒலி – ஒளி காட்சிகளும் நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

குளம் என்பது நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என்பதை அறிவீர்கள். குறிப்பாகப் பறவைகளின் இருப்பிடம். பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் நமது வாலாங்குளம் பல அரிய பறவைகளின் வாழ்விடமாக விளங்குகிறது . இக்குளத்தை, கூழைக்கடா (Pelican), குளத்து நாரை (Pond heron ), நத்தை கொத்தி (Asian spoon bill ), உப்புக் கொத்தி (Little ringed plover), உள்ளான் (Little stint ), சீழ்க்கைச் சிறகி (Lesser whistling duck), தட்டைவாயன் (Northern shoveler), இராக் கொக்கு (Night heron ), வண்ண நாரை (Painted stork), பாம்பு தாரா (Darter), நீர்க் காக்கை (Cormorant) உள்ளிட்ட சுமார் 100 வகையான பறவைகள் பயன்படுத்துவதாகப் பறவை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேலும் இங்கு உப்புக் கொத்தி, நீல வால் பஞ்சுருட்டான் (Blue-tailed bee-eater) ஆகிய பறவைகள் தொலைதூர நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் இங்கு வலசை வருகின்றன. அவ்வகையில் எண்ணிறந்த வகைப் பறவைகள் வலசை வரும் காலம் இது.

உலக அளவில் 49 விழுக்காடு பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் ஆழமற்ற பகுதிகளிலும் கரைகளிலும் வாழும் பறவைகள் ( Waders) வலசை பறவைகள் ( Migratory birds) வேட்டையாடும் பறவைகள் Raptors ) ஆகியவை பெருமளவில் குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

இவ்வகைப் பறவைகளில் பலவும் வாலாங்குளத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. குளக்கரையில் உள்ள மரங்கள் விதமான பல பறவைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகிறது.

இந்தச் சூழலில் ட்ரோன்கள் பறக்க விடப்படுவதும், காதைக் கிழிக்கும் ஒலி கண்ணைப் பறிக்கும் ஒளி யை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களைத் துன்புறுத்தும் செயலாகும். எனவே, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்கிற பெயரில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட செயல்களை நமது குளக்கரைகளில் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நமது சூழலியல் செல்வமான நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு 11 இடங்களைப் புதிய ராம்சர் பகுதிகள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஓசை காளிதாஸ்

இரண்டு புதிய பறவைகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கெனத் தனியான அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இத்தகைய முரண் செயல்பாடுகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

விஜயகாந்த் உடலுக்கு இளையராஜா, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் அஞ்சலி!

வெளி மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் ரசிகர்கள்… மக்கள் வெள்ளத்தால் திணறும் கோயம்பேடு!

+1
1
+1
1
+1
1
+1
6
+1
4
+1
1
+1
4