திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா நியூஸ் 7 தமிழ் செய்தியாளராக நேசபிரபு பணியாற்றி வருகிறார். நேற்று இரவு மர்மநபர்கள் நேசபிரபுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடப்பதற்கு முன்னர் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நேசபிரபு வலியுறுத்தியுள்ளார். Reporter Nesa prabhu attack politicians condemned
செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நியூஸ் 7 தமிழ் அலுவலகம் முன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தநிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மர்மநபர்களால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.
பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்
சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபுவுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். நேசபிரபு மீது தாக்குதல் நடத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
செய்தியாளர் நேச பிரபு, சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
மத்திய அமைச்சர் எல்.முருகன்
செய்தியாளர் நேச பிரபு மீது கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
பத்திரிகையாளர் சகோதரருக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும் அவருக்கான இழப்பீடு வழங்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை
செய்தியாளர் நேசபிரபுவை சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன்.
செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு : என்ன நடந்தது?
அதிமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? – ஜெயக்குமார் விளக்கம்!
தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொடூர கொலை : அன்புமணி காட்டம்!
Reporter Nesa prabhu attack politicians condemned