வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி நிவாரண பொருட்கள் அனுப்பலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 20) தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பிலிருந்து கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வருகின்றன. சென்னை – தூத்துக்குடி விமான சேவை இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதேபோல நெல்லையிலிருந்து ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சேவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 95 சதவிகித பேருந்து சேவைகள் இயங்க ஆரம்பித்து விட்டது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாததால் போக்குவரத்து சேவை முழுமையாக துவங்கப்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிக்கியிருக்கும் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக கட்டணமின்றி சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் நிவாரண பொருட்களை கட்டணமில்லாமல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். அதனடிப்படையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பேருந்துகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்: தயாரிப்பாளரின் திட்டத்திற்கு கமல் ஆதரவு!
நெல்லையில் மீண்டும் ரயில் சேவைகள் துவக்கம்!