நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு, தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 5 பல்நோக்கு பேரிடர் மையங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள், 100 சமுதாயக் கூடங்கள், 73 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு மையத்தில் 90 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் 292 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக 51 கூரை வீடுகள் பகுதியாகவும், 2 கூரை வீடுகள் முழுமையாகவும், 2 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. 4 பசுக்கள், 6 கன்றுகள், 9 ஆடுகள் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்துள்ள கனமழை காரணமாக 145.73 ஏக்கர் குறுவை பயிர்கள், 8,515.75 ஏக்கர் சம்பா பயிர்கள், 6,507.63 ஏக்கர் தாளடி பயிர்கள் என மொத்தம் 15,169.11 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி: முகத்தை ‘பளிச்’ ஆக்கும் கொரியன் டிப்ஸ்!
கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட் பர்ஃபைட்!
யூடர்ன் அடித்த ஆளுநர்: அப்டேட் குமாரு
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா