சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
33 சதவிகித பாதிப்பு விளைநிலங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் ஒரே நாளில் 22 செ.மீ. மழை பதிவானது.
இதன் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை நீர் வடிவதற்குள் கடந்த 11-ம் தேதி இரவு முதல் 12-ம் தேதி அதிகாலை வரை அதீத கனமழை கொட்டி தீர்த்தது.
122 ஆண்டுகளாக இல்லாத வகையில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.
இதன் காரணமாக சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சட்டநாதபுரம், சூரக்காடு, எடக்குடி வடபாதி, காரைமேடு, கதிராமங்கலம், திருநகரி, வடகால், எடமணல், கடவாசல், ராதா நல்லூர், வழுதலைக்குடி, திருமுல்லைவாசல்,
தொடுவாய், விநாயககுடி, உமையாள்பதி, அகணி, கொண்டல், விளந்திடசமுத்திரம், வள்ளுவகுடி, ஆதமங்கலம், பெருமங்கலம், கற்கோவில், கன்னியாகுடி, எருக்கூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிரிடப்பட்ட வயல்கள் வெள்ளக்காடாக மாறின.
வரலாறு காணாத மழையால் வயல்களில் தேங்கிய மழைநீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. இதனால் வேதனையில் தவித்து வரும் விவசாயிகள், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், “சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
33 சதவிகித பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும்” என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
’சினிமாவின் மறுபக்கம்’ ஆரூர்தாஸ் மறைவு: முதல்வர் இரங்கல்!