கனமழை காரணமாகச் சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் வேகமாக நிரம்புவதால் இரு ஏரிகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் 20.86சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புழல் ஏரி அமைந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20அடியாகும்.
3300மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 18.42அடியாகவும் கொள்ளளவு 2692 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 1997கன அடியாக உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
எனவே அணையின் வெள்ள நீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி இன்று மதியம் 3மணி அளவில்,
வினாடிக்கு 100கன அடி உபரிநீர் திறக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
எனவே புழல் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் கொசப்பூர் மணலி மற்றும் சடையான்குப்பம்,
ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 100கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1150கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், 24அடி உயரம் கொண்ட ஏரியின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர் இருப்பு 2764 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி பிற்பகலில் 100கன அடி நீர் திறந்துவிடப்படவுள்ளது.
பிரியா
T20 WorldCup 2022: படமெடுக்கும் பங்களாதேஷை அடக்குமா இந்திய அணி?
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுத்த முடிவு!