தமிழகத்தில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,
‘தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.
யானைகள் புத்துணர்வு முகாம் 2021 வரை 18 ஆண்டுகளாக தொடர்ந்த நடத்தப்பட்டு வந்த நிலையில், பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. கொரோனா காலம் முடிந்தும் இதுவரை புத்துணர்வு முகாம் நடத்தப்படவில்லை.
புத்துணர்வு முகாம்களில் யானைகள் பிற யானைகளோடு பழகுவதால் உளவியல் ரீதியாக மகிழ்ச்சியடைகின்றன. போதுமான ஓய்வு, பழங்கள், காய்கறிகள், கரும்பு, சிறுதானியங்கள், வெல்லம் போன்ற இயற்கையான சத்துப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், கால்நடை மருத்துவர்களின் முறையான உடல் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதனால் யானைகள் உடல்ரீதியாகவும் புத்துணர்வு அடைகின்றன.
தமிழகத்தில் 2021-க்கு பிறகு புத்துணர்வு முகாம் நடத்தப்படாததால், யானைகள் மிகவும் சோர்வாக, அழுத்தத்துடன் காணப்படுகின்றன.
கோயிலுக்கு உள்ளே குளியல் தொட்டிகள், ஷவர் அமைத்தாலும் தனிமை மற்றும் அழுத்தத்தாலும் யானைகளால் பாகன்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
எனவே தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடத்தில் வளரும் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : மருத்துவர் கொலை உச்சநீதிமன்ற விசாரணை முதல் டாஸ்மாக் அடைப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் அமீர் கான்?
கட்சிக் கொடி ஆன்லைன்ல ரிலீஸ்… அப்டேட் குமாரு