சண்டே ஸ்பெஷல் – எடை குறைப்பு: தவிர்க்க வேண்டியவை… சாப்பிட வேண்டியவை!

தமிழகம்

வெயிட் லாஸ் எனப்படும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை முதல் இரவு வரை  தவிர்க்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை என்னென்ன?
காலை எழுந்த உடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider vinegar) அல்லது கற்றாழை சாறு அருந்துவது சிலருடைய பழக்கமாக உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் ஆப்பிள் சைடர் வினிகர் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
கற்றாழை சாற்றை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். குளிர்ச்சி நிறைந்தது என்பதால் எவ்வித கோளாறும் ஏற்படாது. இவற்றைத் தினமும் பருகினால் உடல் எடை குறையும் என்று அறிவியல்பூர்வமாக கூற முடியாது.
தினமும் காலையில் காபி அல்லது டீ அருந்துவதில் தவறில்லை. அதனுடன் நான்கு பிஸ்கட் சேர்த்துச் சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பிஸ்கட் சாப்பிடுவது தவறு. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை காபி, டீ அருந்தலாம். அதற்கு மேல் வேண்டாம்.
காலை உணவுக்கு முன்பே சத்தான சூப் எடுத்துக்கொண்டால் பசி தூண்டப்படும். காலை உணவுக்குப் பிறகும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பாக்கெட் சூப்பை தவிர்க்க வேண்டும். அதில் உப்பு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகும். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமிகள், பதப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பொருள்கள் உடலுக்குப் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
நாம் பருகும் சூப் வகைகள் காய்களை வேக வைத்த நீரில் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது. 350 மில்லி சூப்பில் 250 கிராம் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வைட்டமின் மற்றும் புரதச்சத்து அதிகரிக்கும்.
உடல் எடையைப் பராமரிக்க, வாரத்தில் நான்கு நாட்கள் சிறுதானிய உணவுகள் எடுக்கலாம். சிறுதானிய வகைகள் செரிமானமாக நேரம் எடுக்கும். எனவே, ஆரம்பத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாளடைவில் வாரத்துக்கு நான்கு நாட்கள் வரை சாப்பிடலாம். ஓட்ஸ் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது தவறான கருத்து.
அரிசி உணவாக இருந்தாலும் சிறுதானிய உணவாக இருந்தாலும் அதில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை கிடைக்கும். அவல் உப்புமா சாப்பிடுபவர்கள் முடிந்தவரை சிவப்பு அவல் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளை அவலைவிட சிவப்பு அவலில் சத்துகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு விதமான அவல்களும் மாவுச்சத்து நிறைந்தவையே. இருப்பினும் இவற்றில் இருக்கும் புரதச்சத்தைக் கருத்தில் கொண்டு காய்கறிகள் அதிகம் சேர்த்துச் சாப்பிடலாம்.
பானங்கள் குடிக்க விரும்புபவர்கள் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் குடிக்க வேண்டும். க்ரீன் டீ அல்லது மோர் குடிக்கலாம். எடையைப் பராமரிக்க விரும்புபவர்கள் பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட செயற்கை பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மதிய உணவுக்கு, சாதத்துக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடலாமா என்பது பலரின் சந்தேகம். சப்பாத்தியாக இருந்தாலும், அரிசி சாதமாக இருந்தாலும் அதைவிட இரண்டு பாகம் அதிகமாக காய்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பொரியல், கிரேவி, சாலட் என எந்த வகையாகவும் இருக்கலாம். சப்பாத்தி, சாதம் ஆகிய இரண்டையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்பது உண்டு. நான்கு சப்பாத்திகள், இரண்டு கப் சாதம் என்று மிகுதியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையாது. இரண்டு சப்பாத்திகள், ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கள் என்று சரியான விகிதத்தில் சாப்பிட்டால் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
சிலர் காலையில் இருந்து மதியம் வரை மிகவும் கடினமான டயட் மேற்கொண்டு மாலை ஆனதும் கண்ணில்பட்ட சாட் உணவுகளையெல்லாம் சாப்பிடுவார்கள். பானி பூரி, மசாலா சுண்டல், மசாலா பூரி, சமோசா சுண்டல் என்று தெருவில் கிடைக்கும் சாட் உணவுகள் ஏராளம். கொழுப்புகள் நிறைந்த இவற்றை, ருசிக்கு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமே தவிர குறையாது.
பீட்சா , பர்கர் போன்றவற்றை ஆர்டர் செய்யும்போது மைதா இல்லாமலும் சீஸ் குறைவாகவும் காய்கள் அதிகமாகவும் இருக்கும் வகையைத் தேர்வு செய்து உண்ணலாம். சீஸில் கொழுப்பு அதிகமாக இருக்கும். எனவே, இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரவு உணவு உண்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு உறங்கச் செல்வது, உடல் எடையைக் குறைக்க உதவும்.
இரவு 7.30 மணி அளவில் உணவு சாப்பிட்டால் உறங்குவதற்கு முன் பசி ஏற்படுகிறது என்று சிலர் பல வகையான நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகின்றனர். இந்தப் பழக்கம் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கச் செய்யும். இந்தப் பழக்கத்தைக் தவிர்த்தல் நன்று.
சிலர் இரவு பிரியாணி விருந்து சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் இரண்டு வேளை சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் வயிற்றில் அசிடிட்டிதான் அதிகரிக்குமே தவிர, உடல் எடை குறையாது. ஒரு நாளில் நாம் எவ்வளவு கலோரிகள் (calories) சாப்பிடுகிறோம் என்பதைத்தான் கணக்கிட வேண்டும். ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் கணக்கிட்டு பட்டினி கிடப்பதால் எவ்வித பயனும் இல்லை.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *