பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒலி தடுப்பு பேனல்களை நிறுவுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் 3.7 கிமீ தூரத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
போட்டிக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் போட்டி நடைபெறும் முன்னர் எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல்வேறு இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் போட்டி நடைபெறும் சாலைகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரம்மாண்ட ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏற்படும் இரைச்சலால், போட்டி நடைபெறும் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நோயாளிகள் சிரமத்திற்குள்ளாவர்கள் என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். மேலும் போக்குவரத்து இடையூறு, பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கார் பந்தயம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரமும், உயர்நீதிமன்ற அமர்வின் நிபந்தனைகளும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மூன்று துணை கமிஷனர்கள், ஐந்து உதவி கமிஷனர்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 86 கான்ஸ்டபிள்கள் அடங்கிய ஒரு வலிமையான போலீஸ் குழு போட்டி நடைபெறும் சாலையின் உள்பகுதிக்குள் இருப்பர்.
மூன்று துணை கமிஷனர்கள், எட்டு உதவி கமிஷனர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 65 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 122 கான்ஸ்டபிள்கள் அடங்கிய மற்றொரு குழு வெளி புற பகுதியில் இருப்பர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை பிரஸ் கிளப் சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம், கலைவாணர் அரங்கம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், கேந்திரிய வித்யாலயா மைதானம், ராஜரத்தினம் ஸ்டேடியம் உள்ளிட்ட 18 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பார்வையாளர்களின் 4,250 கார்களையும், 4,600 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.
எப்.ஐ.ஏ சான்றிதழை போட்டி தொடங்கும் அன்று (ஆகஸ்ட் 31) மதியம் அல்லது அதற்கு முன் பெற வேண்டும்.
குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் தடையின்றி வாகனங்கள் செல்வதை போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தவழக்கின் போது நீதிபதி ஆர்.மகாதேவன் அளித்த வழிகாட்டுதலின்படி கார் பந்தயம் நடைபெறும் பகுதியில் உள்ள இரு மருத்துவமனைகளிலும் ஒலி தடுப்பு பேனல்களை நிறுவ வேண்டும் என்றும், விதிகளை மீறினால் தீவிரமாகப் பார்க்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paris Paralympics: அடுத்தடுத்து 4 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா… மோடி வாழ்த்து!
பாஜகவில் இணைந்தார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்!