டெல்டா மாவட்டங்களில் இன்று (நவம்பர் 25) மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படலாம் என்றும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வட மேற்கு திசையில் தமிழகம் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் மிக கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
பிரியா
இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு விழா – முதல்வர் வெளியிட்ட தகவல்!
மகளிர் ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!