வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் கன மழை பெய்தது. இன்று மதியம் முதல் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது.
அதிகபட்சமாக எண்ணூரில் 13செமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 30) மதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை டிசம்பர் 1ஆம் தேதி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஒரிரு இடங்களில் அதி கன மழையும்,
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
தரைகாற்று எச்சரிக்கை…
வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரியா
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
‘சபரிமலையில் மேடை போட்டு பாடினால் நல்ல பூசை கிடைக்கும்!’- இசைவாணி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்
டெல்லியில் காற்றுக்கும் காசு… 20 நிமிஷத்துக்கு எவ்வளவு தெரியுமா?