மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வலுபெற்று தற்போது புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயலானது டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. அப்போது காற்றின் வேகம் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள், ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மோடிக்கு பன்னீர் வாழ்த்து: பாஜகவின் வெற்றி அதிமுகவில் எதிரொலிக்குமா?
சனாதன ஒழிப்பு: உதயநிதியால் காங்கிரஸ் தோல்வியா? – வெங்கடேஷ் பிரசாத் கிளப்பும் புது சர்ச்சை!