தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடரும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து 2வது நாளாக இன்று (டிசம்பர் 18) கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்த ரெட் அலர்ட்டானது அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செந்தியாளர் சந்திப்பில், “அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.
கனமழை குறித்த எச்சரிக்கையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்குத் தரப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது. மேலும் விருதுநகர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பலத்த காற்றானது வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 செ.மீ. இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 செ.மீ. இது 5 சதவீதம் இயல்பை விட அதிகம்.
கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம் மழை அதிகம். நெல்லையில் 135 சதவீதம், தூத்துக்குடியில் 68 சதவீதம், தென்காசியில் 80 சதவீதம் இயல்பை விட அதிகம்” என்று தெரிவித்தார்.
இந்த அளவிற்கு அதி கனமழை பெய்யும் என்று சொல்லவில்லை. ஓரிரு இடங்களில் தான் அதி கனமழை பெய்யும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி முழுக்க அதி கனமழை பெய்து கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு மழை பெய்யும் என்று குறிப்பாக சொல்லவில்லை என்று இன்று காலை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “எச்சரிக்கையைப் பொறுத்தவரை 3 வகையாக இருக்கிறது. 7 – 11 செ.மீ மஞ்சள் எச்சரிக்கை. 12 – 20 செ.மீ வரை ஆரஞ்சு எச்சரிக்கை. 21 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும்.
ரெட் அலர்ட்டுக்கு மேல் எச்சரிக்கை கிடையாது. 21 செ.மீ-க்கு மேல் எத்தனை செ.மீ மழை பெய்தாலும் அது ரெட் அலர்ட் தான்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இந்த வாரம் அது தேவையில்லை…பிக்பாஸ் கொண்டு வந்த திடீர் மாற்றம்!
30 நாட்களில் மனுக்களுக்குத் தீர்வு : “மக்களுடன் முதல்வர்” திட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் உறுதி!