தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசவுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட மொத்தம் 71 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் 5225 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள கேஏபி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரி முதல்வர்களுக்கு இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த மூன்று கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கல்லூரியில் 250 இடங்களும், கேஏபி விஸ்வநாதன் கல்லூரியில் 150 இடங்களும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன.
இளங்கலை மருத்துவக் கல்வி வாரிய கடிதத்தின் படி இந்த கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதன் மூலம் அரசு கல்லூரிகளில் மொத்தம் 500 இடங்களில் சேர முடியாமல் போய்விடும்.
இந்தசூழலில், தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவக் கல்வி இடங்களைத் தக்க வைக்க தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் கடிதத்திற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும் புகழ்பெற்றவை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியும் மருத்துவத்துறையில் பல சாதனைகளை படைத்தவை. இந்தியாவில் மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளில் குறிப்பிடத்தக்கவை. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மிக எளிதாக சரி செய்து விடக் கூடிய குறைகளை காரணம் காட்டி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அது தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
மருத்துவக் கல்லூரிகளில் குறைகளை சரி செய்யும்படி தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு. எனவே, சம்பந்தப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரி செய்து, இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2023-24ஆம் கல்வியாண்டில் 500 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
“இன்னும் சில நாட்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அலட்சியமாக செயல்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இச்சூழலில், மாணவர்களின் நலன் கருதி முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு குறைகளை உடனடியாக சரிசெய்வதுடன் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து தொடர்பாக இன்று (மே 27) தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். சிசிடிவி கேமராக்கள் எல்லாம் இருக்கிறது. ஒன்று, இரண்டு இடங்களில் பழுதுபட்டிருக்கலாம். அதை சரி செய்து கொடுத்துவிடுவோம்.
இந்த சின்ன குறைகளுக்காக அங்கீகாரத்தை ரத்து செய்வது என்பது நமது மாநிலத்தின் மீதான பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் தீர்வை காண நானும், சுகாதாரத் துறை செயலாளரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம்.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்கள். எனவே மத்திய அமைப்புகள் எல்லாம் தமிழகத்தை நோக்கி வந்து பூத கண்ணாடி மூலம் குற்றங்குறைகளை கண்டறிந்து அதை பெரிதுபடுத்துவது சரியான காரணம் அல்ல. இது உங்களுக்கு கைக்கூடாது.
மத்திய மாநில உறவுகளுக்கு எதிராக எந்த செயலை செய்தாலும், அது செய்பவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் சொன்ன சிசிடிவி ரிப்பேர் எல்லாம் அரை மணி நேரத்தில் சரி செய்யக் கூடியது. இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்கு செல்வதெல்லாம் சரியானது அல்ல” என்று காட்டமாக கூறினார்
பிரியா
“அண்ணாமலையுடன் விவாதம் செய்ய தயார்”: பொன்முடி
புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்