பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்: பதிவாகாத எப்.ஐ.ஆர்… ஏன்?

தமிழகம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படாதது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் இருந்து வந்த பல்வீர் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் பகுதியைச் சேர்ந்தவர்.

மும்பை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் ஐபிஎஸ் தேர்வெழுதி கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக ஆனார்.

பின்னர் ஐதராபாத் மற்றும் முசோரியில் பயிற்சி பெற்ற பல்வீர் சிங், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) தனது பயிற்சி பணியில் சேர்ந்தார்.

பல்வீர் சிங் சஸ்பெண்ட்

இந்நிலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கியும், ஆணுறுப்பில் தாக்கியும் ஏஎஸ்பி பல்வீர் சிங் கடும் சித்ரவதை செய்ததாக கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீசார் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

மேலும் தனிப்பிரிவு காவலர்கள் ராஜ்குமார், போகன் ஆயுதப்படைக்கும், நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை சரக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர் சந்தானகுமார், கூடுதல் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

சிசிடிவி கேமிரா வேல செய்யல

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான குழு மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை வருகிற 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் காவல்நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை சமர்பிக்க சார் ஆட்சியர் முகமது சபீர் உத்தரவிட்டார்.

அதன்படி கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், தலைமை காவலர் மற்றும் 2 போலீசார் ஆஜராகி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமிடம் ஒப்படைத்தனர். அதேபோன்று வி.கே.புரம் காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து அம்பை போலீஸ் நிலைய போலீசாரிடம் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் சி.சி.டி.வி. காட்சிகளை கேட்டுள்ளார். அதற்கு இன்று (ஏப்ரல் 6) பதிலளித்துள்ள போலீசார் கடந்த மாதம் 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் சி.சி.டி.வி. கேமராவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ காட்சிகள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராவில் கோளாறு ஏற்பட்டால், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என நடைமுறை உள்ளது. எனினும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அம்பை காவல்நிலைய போலீஸார் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. இதனால், திட்டமிட்டு சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த மாதம் 10-ந்தேதி தான் பாதிக்கப்பட்டவர்களான மாரியப்பன், அருண்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அன்றைய தினத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை என்று கூறியுள்ளது அம்பை காவல்நிலைய போலீசாரின் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருங்கல்லால் அடித்து பற்கள் உடைப்பு

இதற்கிடையே பல்வீர் சிங்கின் கடும் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான அருண்குமார், ஏப்ரல் 5ம் தேதி தனது குடும்பத்தினருடன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்தார்.

அவர், ”சீருடை அணியாத போலீசார் நான் சிறிதும் அசையாதவாறு பிடித்திருக்க, ஏஎஸ்பி பல்வீர் சிங் கையில் வைத்திருந்த கருங்கல்லால் என் பற்களை ஓங்கி பலமுறை அடித்து உடைத்தார். ரத்தம் சொட்ட சொட்ட கருங்கல்லை கடிக்க சொன்னார். அதற்கு நான் மறுத்தபோது பின்பக்கம் அடித்தார்கள்.” என்றார்.

மேலும் ”இங்கு நாங்கள் அடித்ததை யாரிடவும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களை உள்ளே தள்ளி விடுவேன். உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிடும். அதனால் யாரும் கேட்டால், வண்டியிலிருந்து கீழே விழுந்ததாக சொல்ல வேண்டும்’ என பல்வீர் சிங் என்னை மிரட்டினார்.” என்றார்.

reason behind no fir against asp balveer singh ips?

பிறப்புறுப்பில் தாக்கினர்

அதேபோல ஏஎஸ்பி பல்வீர்சிங்கால் தாக்கப்பட்டு நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனும் பல்வீர் சிங் இழைத்த கொடுமைகள் குறித்து பேட்டி அளித்தார்.

அவர், ஜல்லி கற்களைக் கொண்டு அடித்து உடைத்ததாகவும், ஆடைகளைக் கழற்றச் சொல்லி பிறப்புறுப்பில் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் மாரியப்பன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

3 பல்லை பிடுங்கியதற்கு 30 ஆயிரம்

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான சுபாஷ் என்பவரின் மனைவி நேற்று (ஏப்ரல் 6) அளித்த பேட்டியில், “என் கணவர் சுபாஷை 2 நாட்கள் காவலில் வைத்து அடித்து 3 பற்களை பிடுங்கிவிட்டனர். அதற்கு வழக்கறிஞர் திருமலைகுமார் மூலமாக எனக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். மேலும் இதை வெளியே சொன்னால் குண்டாஸ் சட்டத்தில் உன் கணவரை கைது செய்வோம் என மிரட்டினார்.” என்று தெரிவித்தார்.

பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக போலி பேனர்கள்

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பல்வீர் சிங்கை காப்பாற்றும் முயற்சிகளும் மறுபுறம் வெகுவேகமாக நடந்து வருகின்றன. அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கைப் பாராட்டியும், அதே பகுதியில் பணியமர்த்த அரசிடம் வேண்டுகோள் விடுத்தும் பேனர்கள் வைக்கப்பட்டன.

reason behind no fir against asp balveer singh ips?

ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தில் ஊர்மக்கள் சார்பில் வைத்ததாக கூறப்படும் ஒரு பேனரில், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. தமிழக முதல்வருக்கு பணிவான வேண்டுகோள், ஏஎஸ்பி பல்வீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த பேனர் அம்பாசமுத்திரத்தின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பேனரை வைத்தது ‘காவலர் குரல்’ என்ற செய்தி இணையதளத்தின் ரிப்போர்ட்டர் தான் என்று பின்னர் தெரிய வந்தது. மேலும் அதற்கும் ஓடைக்கரை பகுதி மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அங்கிருந்த பிரபல நாளிதழின் பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

reason behind no fir against asp balveer singh ips?

அதேபோல சமூகவலைதளங்களிலும் பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக போஸ்டர் பகிரப்பட்டன. அதில் “நீங்கள் மீண்டும் வர காத்திருக்கிறோம்… எங்களுக்கு நீதி வேண்டும். மக்களை காப்பாற்ற நினைத்து, நேர்மையாக செயல்பட்ட அதிகாரிக்கு இந்த நிலையா? நீங்கள் மீண்டும் அம்பாசமுத்திரம் பகுதிக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்து வேதனையுடன் காத்திருக்கும் அம்பாசமுத்திரம் பகுதி பொதுமக்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

reason behind no fir against asp balveer singh ips?

அதோடு பல்வீர் சிங்கின் புகைப்படத்தை மக்கள் தங்கள் வீட்டு பூஜை அறைகளிலும், கோயில்களிலும் வைத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தின.

போலி போஸ்டர்களின் பின்னணி

எனினும் இவையனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் மீது அனுதாபத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதி இது என்று தெரியவந்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது ஷபீர் ஆலமின் விசாரணையை முடக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்.

மேலும் உள்ளூர் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று அவர்களை சமாதானப்படுத்த முயல்கின்றனர். இந்த விவகாரம் ஏற்கனவே தலைப்புச் செய்தியாகி, மாநிலம் முழுவதும் பேசப்படுகிறது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயல்கின்றனர்.” என்று தெரிவித்தார்.

இதனை அம்பாசமுத்திரம் களத்தில் இருந்து பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளதாக தி செளத் பர்ஸ்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில அதிகாரிகள் தங்களுடன் சில பத்திரிகையாளர்களைச் சேர்த்துக்கொண்டு ‘பாசிட்டிவ்’ பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதன் விளைவாக தான் பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக ஓடைக்கரையில் பேனர்களும், சமுகவலைதளங்களில் போஸ்டர்களும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வீருக்காக களமிறங்கிய ஐபிஎஸ் சங்கம்

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவலில் வைத்து சித்ரவதை செய்வதை அரசு பொறுத்துக் கொள்ளாது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதே நேரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் டிஜிபி ஆபாஷ் குமார் கடந்த 4ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார். ”சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

சப்-கலெக்டர் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வகையான ஊடகங்கள் இந்த விவகாரத்தை தேர்ந்தெடுத்து, ஆதாரங்கள், சாட்சிகள், விசாரணை அமைப்புகளை பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஊகத்தின் அடிப்படையில் செய்திகளை பரப்புகின்றன.

இத்தகைய பாரபட்சமான மற்றும் முன்கூட்டிய அறிக்கைகள், நடந்துகொண்டிருக்கும் விசாரணையை மோசமாகப் பாதிக்கலாம். எனவே, பாரபட்சமற்ற நீதி பரிபாலனத்துக்காக விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தை ஊடகங்களில் வெளியிடுவதில் விருப்புரிமையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் இந்த அறிக்கைக்கு மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஊடகங்களால் மட்டுமே விசாரணை சாத்தியம்

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”அரசாங்கம் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், அது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை சிபிசிஐடி போன்ற வெளி விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கும்.

தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் யார் பக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. காவல்துறை மிகக் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட், காவலர்களின் இடமாற்றம், இப்போது நடந்து வரும் விசாரணை என அனைத்திற்கும் ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குரலை நேரடியாக பதிவு செய்ததால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

இப்போது அறிக்கை வெளியிட்டுள்ள இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், “ஒரு மூத்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி, ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது ஏன் வாய் திறக்கவில்லை?,” என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணை பெயரில் ஆதாரங்கள் அழிப்பு

அம்பையில் நடைபெற்ற மனிதாபமானமற்ற செயலின் மூலம் மனிதனின் அடிப்படை உரிமைகள் குத்தி கிழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றி வரும் மனித உரிமை ஆர்வலரான பி வேலுச்சாமி கூறுகையில், ”இந்த வழக்கில் பல்வீர் சிங்கிற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்வதைத் தவிர்க்க விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி நடந்துள்ள இந்த கொடூர தாக்குதலின் மூலம் சில மோசமான விதிமீறல்கள் நடந்துள்ளன. அதுவே இடைநீக்கம் மற்றும் இடமாற்றத்துக்குக் காரணம். மைனர் சிறுவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கூட பல்பீர் சிங்கால் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்ய ஏராளமான காரணம் இருந்தும், இன்னும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்பீர் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் வரை புறக்கணிப்பு

இதற்கிடையே காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்வதைக் கண்டித்து, இன்று (ஏப்ரல் 6) மற்றும் 8 ஆம் தேதிகளில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அம்பாசமுத்திரம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் ஏஎஸ்பி பல்பீர் சிங் தான் குற்றவாளி என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் இன்னும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது அதிகாரத்தின் மீதான பொதுமக்களின் பார்வையில் அவநம்பிக்கையும் உண்டாக்கும்.

எனவே மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், மாநில காவல்துறையும் பாரபட்சமற்ற, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

கிறிஸ்டோபர் ஜெமா

பாஜகவில் இணைந்த மகன்: காங்கிரஸ் தலைவர் வருத்தம்!

தீர்த்தவாரியில் மூழ்கிய 5 இளம் உயிர்கள்! நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *