தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”புதிய ஆவின் பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் பால் பொருட்கள் விற்கப்பட்டால், தற்போது உள்ள ஆவின் பாலகங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுமா? என்ற அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “ இல்லை, கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆவின் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.மேலும் பால் பொருட்களைத் தான் பிரதானமாக விற்பனை செய்ய உள்ளோம்.
ஏற்கனவே ஆவின் நிறுவனம் காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு வழங்கி உள்ளோம். அப்படி வழங்கியும் ஆவின் பாலகங்களின் வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் வரவில்லை” என்று பதிலளித்தார்.
சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் இயங்கி வருகிற ஆவின் தொழிற்சாலையில், ஆவின் ஊழியரின் தலைமுடியும் துப்பட்டாவும் கன்வெயர் பெல்டில் சிக்கி மரணமடைந்தார். இந்த மாதிரி நிகழ்வுகளைத் தடுப்பதற்கு என்ன வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் “முதல் கட்டமாக சென்னையில் உள்ள மூன்று முக்கிய ஆவின் தொழிற்சாலைகளில் கன்வேயர் பெல்ட் பயன்படுத்தப்படும் இடங்களை முழுதாக ஆட்டோமேட் செய்யவிருக்கிறோம். அதற்குப் பிறகு படிப்படியாக மற்ற ஆவின் தொழிற்சாலைகளிலும் அது செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் பட்டினியா? ஆக்சிஜனும் இல்லையா? நாசா சொல்வது என்ன?
மாணவர்கள் போராட்டம் எதிரொலி : இழுத்து மூடப்பட்ட அரசு கல்லூரி!
பாலியல் வழக்கு: 10 நாட்களில் மரண தண்டனை… மம்தா ஆவேசம்!